திருமலை: பாஜகவில் பிஆர்எஸ் கட்சியை இணைக்க டெல்லியில் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலங்கானாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. சுமார் 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த பிஆர்எஸ் கட்சிக்கு 30 இடங்கள் மட்டுமே கிடைத்தது. அண்மையில் முடிந்த மக்களவை தேர்தலில் 17 தொகுதிகளில் ஒரு இடத்தில் கூட பிஆர்எஸ் கட்சிக்கு வெற்றி கிடைக்கவில்ைல. அதேவேளையில் காங்கிரஸ் 8, பாஜக 8 மற்றும் எம்ஐஎம் 1 இடம் பிடித்தன. தோல்வி எதிரொலி காரணமாக பிஆர்எஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ மற்றும் எம்எல்சிக்கள் உள்ளிட்டோர் காங்கிரஸ் கட்சிக்கு தாவி வருகின்றனர். அதன்படி நேற்றுடன் 8 எம்எல்ஏக்கள், 6 எம்எல்சிக்கள் தாவினர். இதனால் பிஆர்எஸ் கட்சியின் நிறுவன தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரசேகரராவ் கடும் அதிர்ச்சியில் உள்ளார்.
ஏற்கனவே அவரது மகளும், முன்னாள் எம்பியுமான கவிதா, டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கவிதாவை வெளியே கொண்டுவர சட்டப்படியான பல முயற்சிகள் எடுத்தும் பலனில்லை. இந்நிலையில் கவிதாவின் தம்பியும், பிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவருமான கே.டி.ராமாராவ், முன்னாள் அமைச்சர் ஹரீஸ்ராவ் ஆகியோர் கடந்த 4 நாட்களாக டெல்லியில் முகாமிட்டுள்ளனர். அவர்கள் கவிதாவை சிறையில் சந்தித்து பேசி வந்தனர். அத்துடன் பாஜக தேசிய தலைவரும், ஒன்றிய அமைச்சருமான ஜே.பி.நட்டா, தெலங்கானா பாஜக தொடர்பாளர் சந்தோஷ் ஆகியோரை சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பின்போது பிஆர்எஸ் கட்சியை பாஜகவில் இணைப்பது குறித்து பேசப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. முதற்கட்டமாக பிஆர்எஸ் கட்சியின் ராஜ்யசபா எம்பிக்களை, பாஜகவில் இணைத்துவிட்டு அதன்பின்னர் மாநிலத்தில் கட்சியை பாஜகவில் சேர்க்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கவிதாவை விடுவிக்க பாஜக கொடுத்த அழுத்தம் காரணமாகத்தான் பிஆர்எஸ் கட்சியை சேர்ந்தவர்கள் சந்தித்துள்ளனர் என்றும் தங்கள் கட்சியை பாஜகவில் இணைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
அண்மையில் முடிந்த மக்களவை தேர்தலின்போது பாஜக போட்டியிட்ட இடங்களில் அவர்களுக்கு எளிதில் வெற்றி கிடைக்கும் வகையில் மக்கள் செல்வாக்கு இல்லாத வேட்பாளர்களை பிஆர்எஸ் கட்சி நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதை மையப்படுத்திதான் பாஜகவின் பி- டீம் பிஆர்எஸ்கட்சி என காங்கிரஸ் குற்றம்சாட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.
The post சிறையில் உள்ள கவிதாவை விடுவிக்க நிர்பந்தம்? பிஆர்எஸ் கட்சியை பாஜகவில் இணைக்க திட்டம்: டெல்லியில் பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.