×
Saravana Stores

அரசு மருத்துவமனையில் பச்சிளங்குழந்தை கடத்தல்

திருமலை: அரசு மருத்துவமனையில் உணவு டெலிவரி ஊழியர் வேடத்தில் வாலிபரும், செவிலியர் உடையில் இளம்பெண்ணும் சேர்ந்து பச்சிளங்குழந்தையை கடத்திச்சென்றனர். அவர்களை 5 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம் காகுளம் மாவட்டம் கண்டசாலையை சேர்ந்தவர் ஸ்வரூபராணி (30). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர், பிரசவத்திற்காக கிருஷ்ணா மாவட்டம் மசூலிப்பட்டிணத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நேற்று அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை பார்ப்பதற்காக அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வந்தனர். தாய்-சேய் நல வார்டிற்கு நேற்றிரவு மாற்றப்பட்ட நிலையில் தனது குழந்தையுடன் ஸ்வரூபராணி தூங்கிக்கொண்டிருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் உணவு டெலிவரி ஊழியரின் சீருடையில் ஒரு வாலிபரும், செவிலியர் உடையில் ஒரு இளம்பெண்ணும் தாய்-சேய் நல வார்டுக்குள் சென்றனர். அவர்கள் ஸ்வரூபராணியின் அருகே இருந்த குழந்தையை தூக்கிக்ெகாண்டு எவ்வித பதற்றமும் இல்லாமல் மருத்துவமனையில் இருந்து சர்வசாதாரணமாக வெளியேறினர்.

சிறிதுநேரம் கழித்து ஸ்வரூபராணி எழுந்து பார்த்தபோது அருகே இருந்த தனது குழந்தையை காணாது அறிந்து அதிர்ச்சியடைந்தார். கதறி அழுதபடி அங்கிருந்த செவிலியர்களிடம் கேட்டார். பின்னர் மருத்துவமனை வளாகத்தில் இருந்த போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். பின்னர் சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது உணவு டெலிவரி ஊழியர் உடையில் ஒரு வாலிபர் மற்றும் செவிலியர் உடையில் ஒரு பெண் ஆகியோர் குழந்தையை கடத்திக்கொண்டு பைக்கில் செல்வது தெரியவந்தது. இதையடுத்து அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்நிலையில் இங்கிலீஸ்பாளையம் பகுதியில் காலை 7 மணியளவில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் குழந்தையுடன் வந்த செவிலியர் மற்றும் உணவு டெலிவரி உடையில் இருந்த இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் குழந்தையை பத்திரமாக மீட்டனர். `பிடிபட்ட வாலிபர் மற்றும் இளம்பெண்ணை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். முன்பகை ஏதேனும் காரணமாக ஸ்வரூபராணியின் குழந்தையை கடத்தினார்களா? அல்லது குழந்தை கடத்தல் கும்பலுடன் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா? என விசாரித்து வருகின்றனர். குழந்தை கடத்தப்பட்ட 5 மணிநேரத்தில் மீட்ட போலீசாரை உயரதிகாரிகள் பாராட்டினர்.

The post அரசு மருத்துவமனையில் பச்சிளங்குழந்தை கடத்தல் appeared first on Dinakaran.

Tags : Government Hospital ,Thirumalai ,SWARUPARANI ,KAKULAM DISTRICT ,KANDASALA ,STATE OF AP ,Chachilangulanda ,
× RELATED அரசு மருத்துவமனை எமர்ஜென்சி வார்டு...