×
Saravana Stores

புதுவையில் பிரான்ஸ் தேசிய தினம் கொண்டாட்டம்

புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று காலை பிரான்ஸ் தேசிய தினம் கொண்டாடப்பட்டது. கடற்கரை சாலையில் உள்ள போர் வீரர் நினைவிடத்தில் பிரான்ஸ் மற்றும் இந்தியா நாட்டின் தேசியக்கொடிகள் ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. பிரான்சில் கடந்த 1789ம் ஆண்டு ஜூலை 14ம் தேதி பாரீசில் உள்ள பஸ்தி என்ற சிறைச்சாலையை மக்கள் புரட்சி மூலம் தகர்த்து, மன்னராட்சியை முடிவுக்கு கொண்டு வந்து மக்களாட்சியை நிறுவினர். இந்த தினம் பிரான்ஸ் நாட்டு தேசிய தினமாக கொண்டாடப்படுகிறது.

இத்தினத்தை நினைவு கூரும் வகையில், புதுச்சேரி கடற்கரையில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் முதலாம் மற்றும் இரண்டாம் உலகப்போரின்போது உயிரிழந்த பிரான்ஸ் நாட்டிற்கு ஆதரவாக போரில் ஈடுபட்ட இந்திய வீரர்கள் மற்றும் பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி, சென்னை பிரெஞ்சு துணை தூதர் லிசே டல்போட் பரே, புதுவை மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், உள்துறை அதிகாரிகள், பிரெஞ்சு தூதரக அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்று போர் வீரர்கள் நினைவுச் சின்னத்திற்கு மலர் வளையம் வைத்து, போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் இந்தியா- பிரான்ஸ் இரு நாட்டு தேசியக்கொடிகள் ஒருசேர ஏற்றப்பட்டு இரு நாட்டு தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டன.

முன்னதாக நேற்று இரவு புதுச்சேரி பிரெஞ்சு தூதரகம் சார்பில், கடற்கரை சாலையில் உள்ள டுப்ளக்ஸ் சிலையில் இருந்து பிரெஞ்சு தூதரகம் வரை சுமார் 3 கி.மீ. தூரம் டார்ச் லைட், மின் விளக்குகளை கையில் ஏந்திய படியும், பிரான்ஸ் நாட்டின் தேசியக் கொடி மற்றும் இந்திய நாட்டின் தேசியக்கொடியை கையில் ஏந்தி வந்தனர். ஊர்வலத்தின் முன் ஈபிள் கோபுரம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கொண்டுவரப்பட்டது. இதன்பின் பிரான்ஸ் நாட்டு பாடல்கள் இசைக்கப்பட்டு ஆடிப்பாடி மகிழ்ந்தபடி ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலத்தில் புதுச்சேரி பிரெஞ்சு துணை தூதர் லிஸ் டால்போட் பாரே, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், மாவட்ட ஆட்சியர் குலோத்துகன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பிரெஞ்சு மக்கள் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து இன்று மாலை பிரெஞ்சு தூதரக வாயில் மற்றும் கடற்கரை சாலையில் வண்ணமயமான விழாவில் வாணவேடிக்கை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுக்கு பிரெஞ்சு துணை தூதரகம் ஏற்பாடு செய்துள்ளது.

The post புதுவையில் பிரான்ஸ் தேசிய தினம் கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : National Day of France ,Nuevo ,Puducherry ,France National Day ,France ,India ,Paris, France ,New France National Day ,Dinakaran ,
× RELATED தீபாவளியை ஒட்டி கட்டட...