×
Saravana Stores

மதுரை அரசு மருத்துவமனையில் உருவாகியுள்ள 7 மாடி ஜிகா கட்டிடத்தில் முழு மருத்துவ வசதிகள்: அடுத்த மாதம் முதல் துவங்கும்

மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் உருவாகியுள்ள புதிய டவர் பிளாக் 7 மாடி ஜிகா கட்டிடத்தில், முழுமையாக அனைத்து மருத்துவ பிரிவுகளும் அடுத்த மாதம் முதல் செயல்படும் என்று தமிழ்நாடு மருத்துவக்கல்வி இயக்குநர் சங்குமணி நேற்று கூறினார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மதுரை அரசு மருத்துவமனையில் இதயவியல் அறுவை சிகிச்சை துறையில் அனைத்து அறுவை சிகிச்சைகளும் செய்யப்படுகிறது. புதிய ஜிகா கட்டிடத்தில் 70 இருதய நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை தரப்படுகிறது. அரசு மருத்துவமனையில் கடந்த ஓராண்டில் மட்டும் 235 பைபாஸ் சர்ஜரி, 96 வால்வு மாற்று அறுவை சிகிச்சைகள், பிறவிலேயே இதய நோயால் பாதிக்கப்பட்டு இருந்த 46 பேருக்கு அறுவை சிகிச்சை, இதய மூடலுக்கான 34 அறுவை சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஓராண்டில் 12,929 வெளி நோயாளிகள், 728 உள் நோயாளிகள் மற்றும் 4,238 சிறு இதயநோய் பாதிப்புகளுக்கும் சிகிச்சை தரப்பட்டுள்ளது. தினசரி 8 ஆஞ்சியோகிராம் சிகிச்சையுடன், பலூன், பேஸ்மேக்கர் வைப்பது, இதய ஓட்டைகள் சரி செய்வதென இதயவியல் துறை சிறந்த சிகிச்சைகளை வழங்கி வருகிறது. இதற்கிடையே, பள்ளி குழந்தைகளுக்கு பாக்டீரியாவால் ஏற்படுகிறது ருமாட்டிக் பீவர் தொற்று. மதுரை அனுப்பானடியை சேர்ந்த 13 வயது சிறுவனுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டது. அவருக்கு, மருந்து சிகிச்சைக்கு பிறகே அறுவை சிகிச்சை வழங்கலாம் என்ற நிலையில், தகுந்த சிகிச்சை வழங்கவில்லை என, குற்றச்சாட்டு எழுந்தது.

மூட்டு வலி வீக்ககத்தை தொடர்ந்து, இதய பாதிப்பை ஏற்படுத்தும் இந்நோய்க்கு மருந்து சிகிச்சை வழங்கி, குணமடையாத நிலையில் 20 வயதிற்கு மேல் அறுவை சிகிச்சை வழங்கலாம். இதிலும் மருந்து சிகிச்சைக்கு பிறகு, சிலருக்கு அறுவை சிகிச்சை தேவையில்லாமல் போகும். ஆனால், இந்த பாதிப்பிற்கான தொடர் சிகிச்சைக்கு சிறுவனை அழைத்து வரவில்லை என்பதே உண்மை.
மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள புதிய டவர் பிளாக் 7 மாடி ஜிகா கட்டிடத்தில், தற்போது இதயவியல் மருத்துவப்பிரிவு உள்ளிட்ட குறிப்பிட்ட சில பிரிவுகள் மட்டுமே செயல்படுகிறது. அடுத்த மாதம் முதல் தேதியிலிருந்து அனைத்து பிரிவுகளும் 7 மாடியிலும் செயல்படுத்தும் நடவடிக்கைகள் வேகப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், முந்தைய அறுவை சிகிச்சை அரங்குகளில் குறைவின்றி அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாரத்தின் 6 நாட்கள், குறைந்தது தினம் 6 அறுவை சிகிச்சைகள் நடத்தப்படுகிறது.

புதிய டவர் பிளாக்கில் 779 காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். மதுரை பாலரெங்காபுரம் புற்றுநோய் மையத்தில் ஏற்கனவே உள்ள 60 படுக்கைகளுடன், மேலும் ரூ.3 கோடி செலவில் 70 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும். அங்கேயே சிறு அறுவை சிகிச்சைகளுக்கான வசதிகளும் உருவாக்கப்படும். சென்னைக்கு அடுத்தபடியாக, மதுரை அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரித்தல் மையத்திற்கான பூர்வாங்க பணிகளை துவக்கியுள்ளோம். ஆகஸ்ட் மாதத்திற்குள் இப்பணிகள் முழுமை பெறும். இதற்கான பயிற்சியை மதுரையில் இருவர் பெறுகின்றனர். எலும்பு மஜ்ஜை அறுவை சிகிச்சை வசதி ஏற்படுத்தும் பணி வேகப்படுத்தப்பட்டுள்ளது. இப்படி பல வசதிகள் மதுரைக்கு வர இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து மதுரை அரசு மருத்துவமனையின் ஜிகா கட்டிட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அரசு மருத்துவமனை டீன் தர்மராஜ், நிலைய மருத்துவ அதிகாரிகள் லதா, சரவணன், இதய அறுவை சிகிச்சை துறை தலைவர் மெர்வின், இதயவியல் துறை தலைவர் பாலசுப்பிரமணி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். கவுன்சிலிங் சென்டர்கள்… மருத்துவக்கல்வி இயக்குநர் சங்குமணி கூறும்போது, ‘‘மதுரை அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் நிலை குறித்து, அவரது உறவினர்களை அழைத்து டாக்டர்கள் மருத்துவ முன் பின் சிகிச்சைகள் குறித்து தெளிவாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு மருத்துவப்பிரிவிலும் இதற்கென தனி பணியாளர்களுடன் கவுன்சிலிங் சென்டர் செயல்படுத்தப்படும். இதற்கான நடவடிக்கைகளை மதுரை அரசு மருத்துவமனை டீன் மேற்கொள்வார்’’ என்றார்.

 

The post மதுரை அரசு மருத்துவமனையில் உருவாகியுள்ள 7 மாடி ஜிகா கட்டிடத்தில் முழு மருத்துவ வசதிகள்: அடுத்த மாதம் முதல் துவங்கும் appeared first on Dinakaran.

Tags : JICA ,Madurai ,Government Hospital ,Tamil Nadu ,Medical ,Education ,Sangumani ,-storied ,Madurai Government Hospital ,Dinakaran ,
× RELATED மதுரை அரசு மருத்துவமனையில்...