மதுரை: மதுரையில் பள்ளி மாணவரை கடத்தி ரூ.2 கோடி கேட்ட சம்பவத்தில் ஒரு பெண் கூலிப்படையை வைத்து கடத்தி மூளையாக செயல்பட்ட அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இதன்பேரில் பெண்ணை தேடி ஐதராபாத்திற்கு தனிப்படை விரைந்தது. மதுரை, எஸ்எஸ் காலனியை சேர்ந்தவர் ராஜ்குமார். தனியார் வங்கி மேலாளர். இறந்து விட்டார். மனைவி மைதிலி ராஜலட்சுமி (40). இவருக்கு பைபாஸ் சாலையில் காம்ப்ளக்ஸ், வீடுகள் உள்ளன.
தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்த மைதிலி ராஜலட்சுமியின் மகன், ஆட்டோவில் பள்ளி சென்று, மாலை அதே ஆட்டோவில் வீடு திரும்புவது வழக்கம். மாணவரை, ஆட்டோ டிரைவருடன் சேர்த்து கடந்த 11ம் தேதி கும்பல் கடத்தி, ரூ.2 கோடி கேட்டு மிரட்டல் விடுத்தது. இச்சம்பவம் நடந்து 3 மணி நேரத்தில் மதுரை செக்கானூரணி அருகே ஆட்டோ டிரைவருடன், மாணவரையும் போலீசார் மீட்டனர். இச்சம்பவத்தில் போலீசாக இருந்து டிஸ்மிஸ் ஆன போடி செந்தில்குமார் மற்றும் தென்காசியை சேர்ந்த காளிராஜ்(36), வீரமணி(30), நெல்லையை சேர்ந்த அப்துல்காதர் (38) ஆகிய 4 பேர் கைதாகினர்.
தொடர் சம்பவத்தில் ஆட்டோ டிரைவர் பால்பாண்டியை கும்பல் பட்டாக்கத்தி கைப்பிடியால் தாக்கி காயப்படுத்தியுள்ளது. மாணவரின் நெற்றியில் துப்பாக்கியை வைத்து மிரட்டியுள்ளது. கும்பல் கடத்திச் சென்றபோது, தங்களின் வாகனத்திற்கு பின்னே போலீசார் பின்தொடர்ந்ததாலும், அப்போது ஒரு பெண் போனில் பேசியதை தொடர்ந்தே கடத்தல் கும்பல் மாணவரையும், ஆட்டோ டிரைவரையும் இறக்கிவிட்டு தப்பிச் சென்றதும் விசாரணையில் தெரிந்தது. இத்தகவலை தொடர்ந்து போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், இந்த கடத்தல் சம்பவத்தில் மூளையாக ஒரு பெண் செயல்பட்டிருக்கும் அதிர்ச்சித் தகவல் வெளிவந்தது.
இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறும்போது, ‘‘தூத்துக்குடி விளாத்திகுளத்தை சேர்ந்த பெண் சூர்யா. இவர் மைதிலி ராஜலட்சுமியின் கணவர் ராஜ்குமாரிடம், அவர் பணியாற்றும் வங்கி மூலமாக, ரூ.2 கோடி கடன் வாங்கி செலுத்த முடியாத நிலைக்கு போய் விட்டார். இதனால் தனது சொத்துக்களில் சிலவற்றை சூர்யாவிடம், மைதிலி ராஜலட்சுமி கட்டாயப்படுத்தி எழுதி வாங்கியுள்ளார். கடன் வாங்கிய பணமும் தொழிலில் முடங்கி, கூடுதல் சொத்துகளையும் பறி கொடுத்ததால் மன உளைச்சலில் இருந்த சூர்யா, பறிகொடுத்த கூடுதல் சொத்துகளுக்கு பதிலாக எப்படியாவது ரூ.2 கோடி பணத்தை வாங்க திட்டமிட்டே, கூலிப்படையினரை அணுகி இந்த கடத்தல் சம்பவத்தை நிகழ்த்தியுள்ளார்.
4 பேர் கைதான நிலையில், சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட பெண் சூர்யா, மதுரையை சேர்ந்த கிஷோர், மகாராஜா உள்ளிட்டோரை போலீசார் தேடுகின்றனர். கடத்தலின்போது, போலீசுக்கு தகவல் தெரிந்து, அவர்கள் விரட்டத்துவங்கியதால் வேறு வழியின்றி கடத்தியவர்களை விடுவித்து கும்பல் தப்பியுள்ளது. கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட பெண் சூர்யா ஐதராபாத்தில் இருப்பது தெரிந்து தனிப்படையினர் அங்கு விரைந்துள்ளனர். சூர்யாவின் கணவர் குஜராத்தில் ஐஏஎஸ் அதிகாரியாகவும், இருவரும் தற்போது பிரிந்து தொடர்பின்றி இருப்பதாகவும் தெரிகிறது. தொடர்ந்து விசாரித்து வருகிறோம்’’ என்றனர்.
The post மதுரை மாணவன் வழக்கில் திடீர் திருப்பம் ரூ.2 கோடி கடனுக்காக சொத்துக்களை தாய் எழுதி வாங்கியதால் கடத்தல்: கூலிப்படையை ஏவிய தூத்துக்குடி பெண்ணுக்கு வலை appeared first on Dinakaran.