சென்னை: பல்வேறு துறைகளில் கட்டப்படும் கட்டடங்களின் மதிப்பீடு தயார் செய்வதற்குரிய, கட்டுமானப் பொருட்கள் விலை விவரம் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் தினக்கூலி விவரம் அடங்கிய “பொதுவான செந்தர விலை விவர பட்டியல் நேற்று சென்னை தலைமை செயலகத்தில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்டார். இந்த ஆண்டு, முதல் முறையாக, தமிழ்நாடு அரசின் பல்வேறு அரசுத் துறைகள் உபயோகிக்கும் வகையில், 2024-2025ம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த செந்தர விலை விவரப் படடியல் தயாரிக்கும்படி முதல்வர் பொதுப்பணித்துறைக்கு ஆணையிட்டார்.
அதன்படி கீழ்கண்ட அலுவலர்களைக் கொண்ட “செந்தர விலை விவரப் பட்டியல் குழு“ அமைத்து கடந்த மார்ச் 14ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. முதன்மைத் தலைமைப் பொறியாளர் மற்றும் தலைமைப் பொறியாளர் (பொது) உள்ளிட்ட அதிகாரிகள் குழுவின் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றியுள்ளனர். இக்குழுவின் உறுப்பினர்கள், கட்டுமானப் பொருட்கள் மற்றும் இதர இனங்களின் விலைகள் குறித்து சந்தை விலை, மொத்த விற்பனை விலைக் குறியீடு கடந்த 5 ஆண்டுகளுக்கான தகவல்கள் போன்ற பல்வேறு தரவுகளின் அடிப்படையில் விவாதித்து விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த “செந்தர விலைவிவரப் பட்டியல்“ நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இந்நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா, பொதுப்பணித்துறை முதன்மைத் தலைமைப் பொறியாளர் மற்றும் தலைமைப் பொறியாளர்(பொது) கே.பி.சத்தியமூர்த்தி, நிதித்துறை துணைச் செயலாளர்(வரவு, செலவு) பிரதிக் தயாள், பிற துறைச் சார்ந்த இயக்குநர்கள் மற்றும் தலைமைப் பொறியாளர்கள் அடங்கிய குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
The post கட்டுமான பொருள் விலை, தினக்கூலி விவரம் அடங்கிய பொதுவான செந்தர விலை பட்டியல்: அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்டார் appeared first on Dinakaran.