ஹராரே: ஜிம்பாப்வே அணியுடனான 4வது டி20 போட்டியில், 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கில் முதலில் பந்துவீச முடிவு செய்தார். இந்திய அணியில் வேகப் பந்துவீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே அறிமுகமானார். வெஸ்லி, மருமாணி இணைந்து ஜிம்பாப்வே இன்னிங்சை தொடங்கினர்.
இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 8.3 ஓவரில் 63 ரன் சேர்த்தது. அபிஷேக், துபே பந்துவீச்சில் மருமாணி 32, வெஸ்லி 25 ரன்னில் விக்கெட்டை பறிகொடுக்க, பென்னட் 9, கேம்பெல் 3 ரன்னில் பெவிலியன் திரும்பினர். ஜிம்பாப்வே 14.4 ஓவரில் 96 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில், கேப்டன் சிக்கந்தர் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். சிக்கந்தர் 46 ரன் (28 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி தேஷ்பாண்டே வேகத்தில் கில் வசம் பிடிபட்டார்.
டியான் மையர்ஸ் 12, கிளைவ் மடாண்டே 7 ரன் எடுத்து கலீல் அகமது பந்துவீச்சில் அவுட்டாக, ஜிம்பாப்வே 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன் குவித்தது. ஃபராஸ் அக்ரம் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சில் கலீல் அகமது 2, துபே, அபிஷேக், வாஷிங்டன், தேஷ்பாண்டே தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 153 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது.
யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில் இணைந்து துரத்தலை தொடங்கினர். அதிரடியில் இறங்கிய ஜெய்ஸ்வால் 29 பந்தில் அரை சதம் அடித்து அசத்தினார். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் ஜிம்பாப்வே பந்துவீச்சாளர்கள் விழிபிதுங்கினர். கில் தன் பங்குக்கு 35 பந்தில் அரை சதம் அடித்தார். இந்தியா 15.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 156 ரன் எடுத்து தொடர்ச்சியாக 3வது வெற்றியை வசப்படுத்தியது.
ஜெய்ஸ்வால் 93 ரன் (53 பந்து, 13 பவுண்டரி, 2 சிக்சர்), கில் 58 ரன்னுடன் (39 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஜெய்ஸ்வால் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்தியா 3-1 என முன்னிலை வகிப்பதுடன் தொடரையும் கைப்பற்றிய நிலையில், 5வது மற்றும் கடைசி டி20 போட்டி ஹராரேவில் இன்று மாலை 4.30க்கு தொடங்கி நடைபெறுகிறது.
The post தொடரை கைப்பற்றியது இந்தியா: ஜெய்ஸ்வால் – கில் அதிரடி appeared first on Dinakaran.