விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் 2ம் இடம் பிடித்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வெறும் 10 ஆயிரம் ஓட்டு மட்டுமே பெற்று டெபாசிட்டை இழந்தார். திமுக வேட்பாளரின் சாதனை வெற்றியை தமிழகம் முழுவதும் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் 16ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானதை தொடர்ந்து கடந்த 10ம் தேதி இடைதேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலை பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியான தேமுதிக புறக்கணித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 14ம் தேதி தொடங்கியது. இந்தியா கூட்டணியில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக வேட்பாளர் அன்புமணி, நாம் தமிழர் கட்சி அபிநயா, சுயேட்சைகள் என 56 பேர் சார்பில் மொத்தம் 64 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஜூன் 24ம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது. இதில் 35 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
இறுதியாக திமுக வேட்பாளர் சிவா, பாமக வேட்பாளர் அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா உட்பட 29 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இதையடுத்து தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரம் செய்தனர். கடந்த 8ம் தேதி பிரசாரம் ஓய்ந்தது. 10ம் தேதி காலை 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கி மாலை 6 மணிக்கு நடந்தது. இதில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்தனர். மொத்தமுள்ள 2,37,031 வாக்காளர்களில் 1,96,495 பேர் வாக்களித்தனர். பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் தேர்தலில் போட்டியிடாததால் வாக்குப்பதிவு சதவீதம் குறையும் என்று கூறப்பட்டது. ஆனால், இதுவரை இல்லாத வகையில் இடைத்தேர்தலில் மொத்தம் 82.48% வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் வாக்கு இயந்திர பெட்டிகளுக்கு சீல் வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான பனையபுரம் அரசு மேல்நிலைபள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டு ஸ்டிராங் ரூமில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன.
இந்த மையத்துக்கு துணை ராணுவம், துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை போலீஸ், உள்ளூர் போலீசார் என 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தமிழகத்தில் 2026ல் நடைபெறும் சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு விக்கிரவாண்டி இடைதேர்தல் முன்னோட்டம் என்று அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வருவதால் தமிழகமே இந்த தொகுதியின் வெற்றி நிலவரத்தை எதிர்பார்த்து காத்திருந்தது. இந்நிலையில், பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முன்னதாக நேற்று அதிகாலை 5.30 மணிக்கு வாக்கு எண்ணுவதற்கான ஆயத்த பணிகள் தொடங்கின. தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் இருந்து தபால் வாக்கு பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டு வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு வரப்பட்டது. காலை 7.30 மணியளவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையின் சீல் மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் பழனி முன்னிலையில் அகற்றப்பட்டு வாக்குச்சாவடி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் அறைக்கு எடுத்து வரப்பட்டது. ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு மேற்பார்வையாளர், நுன் பார்வையாளர், உதவியாளர் மற்றும் வாக்குப்பெட்டிகளை கொண்டு செல்ல கிராம நிர்வாக உதவியாளர் நியமிக்கப்பட்டுருந்தனர்.
வாக்கு எண்ணிக்கையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தன. துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை, உள்ளூர் போலீசார் என 1219 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வேட்பாளர்களின் முகவர்கள் பலத்த சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் செல்போன் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. சரியாக காலை 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கை 2 மேஜைகளில் ஒரே ரவுண்டாக எண்ணப்பட்டன. மொத்தம் பதிவான 798 வாக்குகளில் 36 வாக்குகள் செல்லாதவை. திமுகவுக்கு 493 வாக்குகளும், பாமகவுக்கு 222 வாக்குகளும் கிடைத்தன. 271 வாக்குகள் திமுக முன்னிலை பெற்றது. தொடர்ந்து, 14 மேஜைகளில் 20 சுற்றுகளாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. ஒவ்வொரு மேஜையிலும் தனித்தனியாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு சிசிடிவி மூலம் கண்காணிக்கப்பட்டு வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டன. முதல் சுற்றில் திமுக வேட்பாளர் சிவா 5521 வாக்குகளும், பாமக வேட்பாளர் 2894 வாக்குகளும் நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா 303 வாக்குகளும் பெற்றனர். இதனால் முதல் சுற்றிலேயே திமுக வேட்பாளர் 2630 வாக்குகள் முன்னிலை பெற்றார். தொடர்ந்து, 2வது சுற்றில் 3428 வாக்குகளும், 3வது சுற்றில் 4636 வாக்குகளும் திமுக வேட்பாளர் சிவா முன்னிலை பெற்றார்.
தொடக்கத்தில் இருந்தே முன்னிலை பெற்ற திமுக வேட்பாளர் ஒவ்வொரு சுற்றுக்கும் பாமக வேட்பாளரை விட பல ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்று வந்தார். மொத்தம் 21வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் சிவா 1,24,053 வாக்குகள் பெற்று அபார வெற்றியை பதிவு செய்தார். பாமக வேட்பாளர் 56,296 வாக்குகள் பெற்று படுதோல்வியை சந்தித்தார். நாம் தமிழர் கட்சி அபிநயா 10,602 வாக்குகளை பெற்று டெபாசிட் இழந்தார். அதேபோல் 26 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். திமுக வேட்பாளர் அன்னியூர்சிவா எதிர்த்துப் போட்டியிட்ட பாமக வேட்பாளரை விட 67,757 வாக்குகள் சாதனை வெற்றியை பதிவு செய்தார். இதனைத் தொடர்ந்து மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் பழனி முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலரான சந்திரசேகர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார். அப்போது அமைச்சர் பொன்முடி, எம்பி ஜெகத்ரட்சகன், மாவட்ட பொறுப்பாளர் கவுதம சிகாமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலை ஒப்பிடுகையில் திமுக கூட்டணிக்கு சுமார் 52 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக கிடைத்து உள்ளதும், கடந்த சில தேர்தல்களில் தொடர்ந்து திமுக கூட்டணி விக்கிரவாண்டியை கைப்பற்றி உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த சாதனை வெற்றியை திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
The post விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் சாதனை வெற்றி: 67 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அபாரம் appeared first on Dinakaran.