×
Saravana Stores

மகாராஷ்டிரா சட்ட மேலவை தேர்தல் முடிவில் பரபரப்பு; 8 காங். எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களித்தது அம்பலம்: நட்சத்திர ஓட்டலில் தடபுடல் விருந்து கொடுத்தும் பலனளிக்கவில்லை

மும்பை: மகாராஷ்டிர சட்ட மேலவையின் 11 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 8 எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களித்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. மகாராஷ்டிரா மாநில சட்ட மேலவையில் காலியாகவுள்ள 11 இடங்களுக்கு 12 பேர் போட்டியிட்டனர். ஆளும் கூட்டணியான பாஜக சார்பில் 5 வேட்பாளர்களும், சிவசேனா (ஷிண்டே பிரிவு), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) சார்பில் தலா 2 வேட்பாளர்களும் நிறுத்தப்பட்டனர். அதேபோல், எதிர்க்கட்சிகளின் கூட்டணி சார்பில் காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் பிரிவு) தலா ஒரு வேட்பாளரும் களமிறக்கப்பட்டனர். இந்தக் கூட்டணியைச் சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் பிரிவு) கட்சியானது, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கட்சி நிறுத்திய வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தது.

இந்நிலையில் நேற்று எம்எல்ஏக்கள் அளிக்கும் விருப்ப வாக்குகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த தேர்தலில் ஆளும் கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட 9 வேட்பாளர்களும், எதிர்க்கட்சிகள் கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரதன்ய சதவ், சிவசேனா (உத்தவ் பிரிவு) வேட்பாளர் மிலிந்த் தாக்கரே ஆகியோர் வெற்றி பெற்றனர். ஆனால், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கட்சி வேட்பாளர் ஜெயந்த் பாட்டீல் தோல்வியடைந்தார். இதற்கு காரணம், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சில எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களித்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மகாராஷ்டிர பேரவையில் காங்கிரசுக்கு 37 எம்எல்ஏக்களும், சிவசேனாவுக்கு (உத்தவ் பிரிவு) 15 எம்எல்ஏக்களும் உள்ளனர்.

ஒரு மேலவை உறுப்பினரை தேர்ந்தெடுக்க குறைந்தபட்சம் 23 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படும் என்ற நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் பிரதன்ய சதவுக்கு 30 எம்எல்ஏக்கள் வாக்களிக்கவும், மீதமுள்ள 7 எம்எல்ஏக்கள் சிவசேனா (உத்தவ் பிரிவு) வேட்பாளர் மிலிந்த் தாக்கரேவுக்கு வாக்களிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால் தேர்தல் முடிவுகளை பார்க்கும் போது பிரதன்ய சதவுக்கு 25 வாக்குகளும், மிலிந்த் தாக்கரேவுக்கு 22 வாக்குகளும் கிடைத்துள்ளன. இதையடுத்து, காங்கிரசைச் சேர்ந்த 8 எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களித்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது காங்கிரசின் 37 எம்எல்ஏக்களில் பிரதன்ய சதவுக்கு 25 வாக்குகள் கிடைத்தன.

மீதமுள்ள 12 வாக்குகளில் மிலிந்த் தாக்கரேவுக்கு 7 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. ஏற்கனவே மிலிந்த் தாக்கரேவின் 15 வாக்குகளுடன் காங்கிரசின் 7 வாக்குகளும் சேர்த்ததால் அவர் 22 வாக்குகள் பெற்று இரண்டாது சுற்றில் வெற்றி பெற்றார். அதனால் காங்கிரசின் மீதமுள்ள ஐந்து வாக்குகள் எங்கு சென்றது என்பது தான் கேள்வியாக உள்ளது. சரத்பவார் ஆதரவு பெற்ற ஜெயந்த் பாட்டீல் 12 வாக்குகள் பெற்றார். இந்த 12 வாக்குகளும் ஏற்கனவே அவர்களிடம் உள்ளவையாகும். மொத்தமாக வெளியான புள்ளி விபரங்களின் அடிப்படையில் பார்த்தால் கிட்டத்தட்ட 7 முதல் 8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சி மாறி ஓட்டு போட்டதாக சட்ட மேலவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து வஞ்சித் பகுஜன் அகாடியின் தலைவர் பிரகாஷ் அம்பேத்கர் கூறுகையில், ‘மகாராஷ்டிர சட்ட மேலவை தேர்தலில், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 8 பேர் கட்சி மாறி வாக்களித்துள்ளனர். தலித்துகள், பழங்குடியினர், முஸ்லிம்கள் மற்றும் ஓபிசிகளை காங்கிரஸ் முட்டாளாக்கி உள்ளது. இவர்கள் அரசியல் சாசனத்தை எப்படி காப்பாற்றப் போகிறார்கள்?’ என்று விமர்சித்துள்ளார். சட்ட மேலவை தேர்தலில் அனைத்து கட்சிகளும் தங்களது எம்எல்ஏக்களை ஓட்டலில் தங்கவைத்து தடபுடல் விருந்து கொடுத்து தேர்தலை எதிர்கொண்டன. அப்படியிருந்தும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 8 எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களித்திருப்பது மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வாக்குகள் எப்படி கைமாறியது?
அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 42 எம்எல்ஏக்கள் இருந்தனர். ஆனால் அந்த கட்சி வேட்பாளர்களுக்கு 47 வாக்குகள் கிடைத்தது. இதேபோல் சிவசேனாவுக்கு (ஷிண்டே பிரிவு) 44 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தது. ஆனால் அந்த கட்சிக்கு 49 வாக்குகள் கிடைத்தது. அஜித் பவாரின் கட்சியில் இருந்து சில எம்எல்ஏக்கள் அணி மாறி வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுபோன்ற சம்பவம் எதுவும் நடக்கவில்லை. மாறாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 7 முதல் 8 எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களித்துள்ளனர். இத்தேர்தல் மூலம் அஜித் பவார், தனது கட்சி எம்எல்ஏக்களை தக்கவைத்துக்கொண்டார்.

ஆனால் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலர், கட்சி மாறி வாக்களித்துள்ளனர். இந்த எம்எல்ஏக்கள் யார்? என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து கட்சி தலைமைக்கு அறிக்கை அனுப்பப்படும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் நானா பட்டோலே தெரிவித்தார். அடுத்த சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், சட்ட மேலவையில் பாஜக கூட்டணியின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றதால், அவர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ஆனால் மக்களை சந்தித்து வாக்கு கேட்கும் போதுதான் உண்மை நிலைமை தெரியவரும்.

The post மகாராஷ்டிரா சட்ட மேலவை தேர்தல் முடிவில் பரபரப்பு; 8 காங். எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களித்தது அம்பலம்: நட்சத்திர ஓட்டலில் தடபுடல் விருந்து கொடுத்தும் பலனளிக்கவில்லை appeared first on Dinakaran.

Tags : Maharashtra Legislative Assembly ,Mumbai ,Congress ,Maharashtra Chata Malawa ,Maharashtra State Law Fair ,Cong. ,MLAs Party ,
× RELATED மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல்...