*உடன் தங்கியவர்களே தீர்த்துக்கட்டினர்
*காரில் சடலத்தை போட்டு தப்பிய கும்பல்
இளம்பிள்ளை : இளம்பிள்ளை அருகே தலையில் கல்லைப்போட்டு மெக்கானிக் படுகொலை செய்யப்பட்டார். அவரது சடலத்தை காரில் போட்டு பாலத்தில் நிறுத்திச்சென்று கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அடுத்த இடங்கணசாலை – சின்னப்பம்பட்டி செல்லும் வழியில் உள்ள மணல் ஓடை பாலம் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. நேற்று காலை அவ்வழியாக சென்றவர்கள் சந்தேகமடைந்து, மகுடஞ்சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் போலீசார், காரை திறந்து பார்த்த போது, சாவியுடன் நிறுத்தப்பட்டு இருந்த காரினுள் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் அங்கு திரண்டனர்.
காரின் முன்பக்க பேனட் திறந்து இருந்தது. காரின் மேட்டால் சுற்றப்பட்டு தலை நசுங்கிய நிலையில் இருந்த சடலத்தை மீட்டனர். தகவல் அறிந்த மாவட்ட எஸ்பி., அருண்கபிலன், சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து மோப்ப நாய் வரவழைக்கப் பட்டது. அது சிறிது தூரம் ஓடிசென்று நின்றுவிட்டது. பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். இதையடுத்து வாலிபரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து எஸ்பி., மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இறந்து கிடந்தவர் யார், எதற்காக கொலை செய்யப்பட்டார். எவ்வாறு கொலை செய்யப்பட்டார். மக்கள் நடமாட்டம் உள்ள பாலம் பகுதிக்கு சடலத்தை கொண்டுவந்து காருடன் விட்டுச்சென்ற வர்கள் யார் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கினர்.
விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் இளம்பிள்ளை அடுத்த சின்னப்பம்பட்டியை சேர்ந்த கணேசன் மகன் மெக்கானிக் பாரதி ராஜா(35) என்பதும், இவர் இடங்கணசாலை புவனகணபதி கோயில் தெருவில் வீடு எடுத்து, நண்பருடன் தங்கி, எழுமாத்தனூர் பகுதியில் உள்ள கார் பட்டறையில் மெக்கானிக்காக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும், கார் பட்டறையில் விசாரித்தபோது பாரதி ராஜா, கடந்த 3 நாட்களாக வேலைக்கு வரவில்லை என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர் தங்கியிருந்த வீட்டுக்கு சென்ற போலீசார், பூட்டிய கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு ஆட்டுரல் கல்லில் ரத்தக்கரை இருந்துள்ளது.
அறையில் நடந்த பிரச்னையில் ஆட்டுரலை எடுத்து பாரதி ராஜாவின் தலையில் போட்டு கொலை செய்து, பின்னர் சடலத்தை 2 கி.மீ தூரம் காரில் எடுத்துச்சென்று, மணல் ஓடை பாலம் பகுதியில், கார் பழுதாகி நிற்பது போல, சடலத்துடன் நிறுத்திவிட்டு கொலையாளிகள் தப்பிச்சென்றது தெரியவந்துள்ளது. ஆனால் இந்த கார் யாருடையது, கடந்த 3 நாட்களாக பாரதிராஜா வேலைக்கு செல்லாமல் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. பாரதி ராஜாவுடன் தங்கியிருந்த சேலம் அழகாபுரத்தை ரவி என்பவர் தலைமறைவாகி உள்ளார். அவர் தான் பாரதி ராஜாவை தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துள்ளார்.
அவரை கண்டுபிடித்தால் மட்டுமே, எதற்காக பாரதிராஜா கொலை செய்யப்பட்டார் என்பதும், யார் உதவி செய்தார்கள் என்பதும் தெரியவரும் என போலீசார் கூறினர். தொடர்ந்து மகுடஞ்சாவடி இன்ஸ்பெக்டர் தலைமையில் கார் நிறுத்தப்பட்டுள்ள வழித்தடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். சடலத்துடன் விட்டுச்சென்ற கார் யாருடையது என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post இளம்பிள்ளை அருகே பரபரப்பு சம்பவம் தலையில் கல்லைப்போட்டு மெக்கானிக் படுகொலை appeared first on Dinakaran.