×
Saravana Stores

எமர்ஜென்சியை அமல்படுத்திய ஜூன் 25ம் தேதி அரசியல் சாசன படுகொலை தினமாக அனுசரிப்பு: ஒன்றிய அரசு அறிவிப்பால் சர்ச்சை

புதுடெல்லி: எமர்ஜென்சியை அமல்படுத்திய ஜூன் 25ம் தேதி அரசியல் சாசன படுகொலை தினமாக அனுசரிக்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்து உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி 1975ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி அவசர நிலையை பிரகடனம் செய்தார். அப்போது நாட்டில் உள்ள முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஜூன் 25ம் தேதியை அரசியல் சாசன படுகொலை தினமாக அனுசரிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: 1975ம் ஆண்டு ஜூன் 25 அன்று, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, சர்வாதிகார மனநிலையின் மோசமான வெளிப்பாடாக, நாட்டில் அவசரநிலையை பிரகடனப்படுத்தினார். இதன்மூலம், அவர் நமது ஜனநாயகத்தின் ஆன்மாவை நெரித்தார். எந்தத் தவறும் செய்யாமல் லட்சக்கணக்கான மக்கள் சிறை கம்பிகளுக்குப் பின்னால் தள்ளப்பட்டனர். ஊடகங்களின் குரல் அடக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25ம் தேதியை அரசியலமைப்பு படுகொலை தினமாகக் கடைப்பிடிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த நாள் 1975 அவசரநிலையின் மனிதாபிமானமற்ற வலிகளை சகித்த அனைவரின் மகத்தான பங்களிப்பையும் நினைவுகூரும். பிரதமர் மோடி தலைமையிலான அரசு எடுத்துள்ள இந்த முடிவு, அடக்குமுறை அரசின் கைகளில் விவரிக்க முடியாத துன்புறுத்தலை எதிர்கொண்ட போதிலும், ஜனநாயகத்தை மீட்டெடுக்கப் போராடிய, லட்சக்கணக்கான மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அமைந்துள்ளது.

அரசியலமைப்பு படுகொலை தினம் அனுசரிக்கப்படுவது, ஒவ்வொரு இந்தியரிடமும் தனிமனித சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்கவும் உதவும். இதனால் காங்கிரஸ் போன்ற சர்வாதிகார சக்திகள், அந்த கொடூரங்களை மீண்டும் செய்வதைத் தடுக்கும். இவ்வாறு தெரிவித்து உள்ளார். ஒன்றிய அரசின் இந்த அறிவிப்பு கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

* ஜூன் 4 மோடி தோல்வி தினம்: காங்கிரஸ் பதிலடி
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: இது உயிரியல் ரீதியாக பிறக்காத பிரதமரின் தலைப்பு செய்தியாகும் முயற்சி மட்டுமே. 10 ஆண்டுகளாக அறிவிக்கப்படாத அவசரநிலை ஆட்சியை நடத்திய அவருக்கு ஜூன் 4ம் தேதி இந்திய மக்கள் தனிப்பட்ட, அரசியல் மற்றும் தார்மீக ரீதியான தோல்வியை வழங்கி உள்ளனர்.

இந்த அறிவிப்பு மோடி இல்லாத நிலைக்கு மேலும் கொண்டு செல்லும். ஏனெனில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் அதன் கொள்கைகள், மதிப்புகள் மற்றும் நிறுவனங்களை திட்டமிட்ட தாக்குதலுக்கு உள்ளாக்கியவர் உயிரியல் இல்லாமல் பிறந்த பிரதமர்தான்.
இதே உயிரியல் இல்லாமல் பிறந்த பிரதமரின் கூட்டம் தான் 1949 நவம்பரில் நமது இந்திய அரசியலமைப்பு சட்டம் மனுஸ்மிருதி அடிப்படையில் அமையவில்லை என்று கூறி நிராகரித்தது.

இந்த உயிரியல் அல்லாமல் பிறந்த பிரதமருக்கு ஜனநாயகம் என்றால் அதிகார நாற்காலியை கைப்பற்றுவது மட்டுமே. இதே போல் இனிமேல் ஒவ்வொரு ஆண்டும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்ட நவம்பர் 8ம் தேதியை இந்திய மக்கள்வாழ்வாதாரக் கொலை நாளாக கொண்டாடுவார்கள். அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

அஞ்சலி செலுத்தும் நாள்: மோடி
பிரதமர் மோடி தனது டிவிட்டர் தளத்தில்,’ இந்திய வரலாற்றின் இருண்ட கட்டத்தை காங்கிரஸ் கட்சி கட்டவிழ்த்துவிட்டது. எமர்ஜென்சியின் அதிகப்படியான அடக்குமுறை காரணமாக பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் அஞ்சலி செலுத்தும் நாள்’ என்று கூறியிருக்கிறார்.

* இப்போது ஏன்?
எமர்ஜென்சி 1975ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. 10 ஆண்டுகள் இதுவரை ஒன்றியத்தில் ஆட்சியில் இருந்த பிரதமர் மோடி திடீரென இப்போது 3ம் முறையாக பதவி ஏற்ற பிறகு இந்த அறிவிப்பை வெளியிட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மக்களவை தேர்தலின் போது மோடி மீண்டும் பிரதமரானால் அரசியல்சாசன சட்டத்தை மாற்றிவிடுவார் என்று எதிர்க்கட்சிகள் பிரசாரம் மேற்கொண்டனர்.

அரசியல் சாசன சட்ட புத்தகத்தை தற்போது எங்கு சென்றாலும் கையில் எடுத்துச்செல்லும் ராகுல்காந்திக்கு நெருக்கடி கொடுக்கும் வகையிலும் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்ட நாளை அரசியலமைப்பு படுகொலை தினமாக கடைபிடிக்கும் அறிவிப்பை மோடி அரசு வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

The post எமர்ஜென்சியை அமல்படுத்திய ஜூன் 25ம் தேதி அரசியல் சாசன படுகொலை தினமாக அனுசரிப்பு: ஒன்றிய அரசு அறிவிப்பால் சர்ச்சை appeared first on Dinakaran.

Tags : Constitutional Massacre Day ,Union Govt ,New Delhi ,Union Government ,Former ,Indira Gandhi ,Dinakaran ,
× RELATED அரிசி ஏற்றுமதி கட்டுப்பாட்டை நீக்கிய ஒன்றிய அரசு