காத்மண்ட்: நேபாளத்தில் நேற்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி இரண்டு பேருந்துகள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டன. பேருந்தில் இருந்த 7 இந்தியர்கள் உட்பட 65 பேரை மீட்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை காத்மண்டை சேர்ந்த பேருந்து ஒன்றும், கவுர் செல்லும் பேருந்தும் சாலையில் சென்று கொண்டிருந்தன.
நாராயணன்கட் – முக்லிங் சாலையில் பேருந்து வந்தபோது அந்த பகுதியில் திடீரென பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் பாறைகளும் , மண்ணும் சரிந்ததில் இரண்டு பேருந்துகளும் சாலையைவிட்டு விலகி திரிசூலி ஆற்றில் விழுந்து அடித்து செல்லப்பட்டன. இந்த காத்மண்ட் பேருந்தில் 24 பயணிகளும், கவுர் செல்லும் பேருந்தில் 41 பயணிகளும் இருந்தனர். 65 பேரும் பேருந்துடன் ஆற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளனர்.
காத்மண்ட் பேருந்தில் இருந்த மூன்று பேர் மட்டும் வெளியே குதித்து தப்பியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 21 பேரும் பிர்குஞ்சில் இருந்து காத்மண்ட் சென்றுகொண்டிருந்துள்ளனர். இவர்களில் 7 பேர் இந்தியர்கள் என தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. நேபாள காவல்துறை, ஆயுத படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு இருப்பதால் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சாலைகளில் குவிந்து கிடக்கும் மண் குவியல்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
அவற்றை அகற்றும் பணியும் தீவிரமாக நடந்து வருகின்றது. இதனிடையே மழை வெள்ளம், நிலச்சரிவினால் ஏற்பட்ட பல்வேறு சம்பவங்களில் காஸ்கி மாவட்டத்தில் 11 பேர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக பிரதமர் புஷ்ப கமல் தஹால் பிரசந்தா கூறுகையில், “நிலச்சரிவில் சிக்கிய பேருந்து பயணிகள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டது குறித்து அறிந்து வருத்தமடைந்தேன். பயணிகளை தேடி மீட்பதற்காக உள்துறை உட்பட அரசின் அனைத்து முகமைகளுக்கும் உத்தரவிட்டுள்ளேன். வெள்ளம் மற்றும் நிலச்சரிவு குறித்து பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ள வேண்டும்” என்றார்.
* 7 இந்தியர்கள் பலி?
காத்மண்ட் நோக்கி சென்ற பேருந்தில் இருந்த பயணிகளில் 7 பேர் இந்தியர்கள் என தெரியவந்துள்ளது. இவர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை. மாயமானவர்களில் 6 பேர் சந்தோஷ் தாகூர், சுரேந்திரா ஷா, அதித் மியான், சுனில், ஷானாவாஜ் ஆலம் மற்றும் அன்சாரி ஆகியோர் என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஒருவரது பெயர் மற்றும் விவரங்கள் தெரியவில்லை.
The post நேபாளத்தில் பயங்கர நிலச்சரிவு ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 பேருந்துகள்: 7 இந்தியர்கள் உட்பட 65 பயணிகள் பலி? மீட்பு பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.