சேலம்: சேலம் மத்திய சிறையில் சமையல்காரராக பணியாற்றி வந்தவர் தனபால் (40). இவர் கைதிகளுக்கு கஞ்சா கொடுப்பதாக சிறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரை வார்டன்கள் கண்காணித்து வந்தனர். சாப்பாடு சமைத்தபிறகு, கஞ்சியை வடிப்பதற்கான சாக்கும், சவுக்கு கட்டையும் சிறையின் வெளிப்பகுதியில் இருக்கும். இதனை எடுத்துவருவதற்காக சிறையிலிருந்து வெளியே வரும் தனபால், அங்கு வார்டன்கள் உடைமாற்றும் அறைக்கு சென்றுவிட்டு செல்வார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் 4ம்தேதி அதிகாலை 3.30 மணிக்கு சாக்குப்பையை எடுப்பதற்காக வெளியே வந்தார். பின்னர் சிறைக்குள் சென்றபோது, அவரை மடக்கிய வார்டன்கள் சோதனை நடத்தினர். அவரது உள்ளாடைக்குள் இருந்த 140 கிராம் கஞ்சாவை எடுத்தனர். இது தொடர்பாக அஸ்தம்பட்டி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. தொடர் விசாரணையில் சமையல்காரர் தனபால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில், தற்போது அவரை டிஸ்மிஸ் செய்து சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் வினோத் உத்தரவிட்டுள்ளார்.
The post கைதிகளுக்கு கஞ்சா கடத்திய சமையல்காரர் ‘டிஸ்மிஸ்’ appeared first on Dinakaran.