பெரம்பூர்: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 11 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், 10 நாட்களாக நோட்டமிட்டு தீர்த்துக்கட்டியது தெரியவந்தது. பணம் கைமாறியது தொடர்பாக, முக்கிய குற்றவாளியின் வங்கி கணக்குகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 5ம் தேதி பெரம்பூரில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பிரபல கூலிப்படை கும்பல் தலைவன் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டு, பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடந்த ஆண்டு ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் ஆம்ஸ்ட்ராங் இருந்தார், என கருதி, அவரை பழிதீர்த்ததாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்தனர். ஆனால், ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் இந்த படுகொலை சம்பவம் குறித்து பல்வேறு சந்தேகங்களை முன்வைத்து வருகின்றனர். கொலையாளிகளுக்கு பின்னணியில் வேறு சில கும்பல் இருக்கலாம் எனவும், பொருளாதார ரீதியாக அவர்களுக்கு யாராவது உதவி இருக்க கூடும் எனவும் கூறி வருகின்றனர். அதே நேரம், ஆற்காடு சுரேஷ் கொலை சம்பவம் மட்டுமே ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு காரணமா, ஆம்ஸ்ட்ராங்கின் வேறு யாரேனும் பொதுவான எதிரிகள் இதன் பின்னணியில் உள்ளனரா, இந்த கொலையை தென்மாவட்ட கூலிப்படை செய்ததா, ஆருத்ரா நிறுவனம் இதில் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து, கைதானவர்களிடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
எனவே, சிறையில் உள்ள 11 பேரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்த செம்பியம் போலீசார், 7 நாட்கள் காவல் கேட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். சம்பந்தப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படக்கூடும் என்பதனால் காணொளி காட்சி மூலம் விசாரணை நடத்தப்பட்டு ஆம்ஸ்ட்ராங் கொலையில் சம்பந்தப்பட்ட 11 பேரிடமும் 5 நாட்கள் விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் 11 பேரையும் காவலில் எடுத்த செம்பியம் போலீசார், பரங்கிமலையில் உள்ள இணை ஆணையர் அலுவலகத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் எவ்வளவு பணம் இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. யாரெல்லாம் தொடர்பில் உள்ளனர் என 11 பேரிடமும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் ஆம்ஸ்ட்ரங்கை கொலை செய்வதற்கு முன்பு 10 நாட்கள் வரை பொன்னை பாலு உள்ளிட்ட சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பெரம்பூரில் நோட்டமிட்டதாகவும், சம்பவத்தன்று பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள பாரில் அமர்ந்து மது அருந்தியதும் தெரியவந்துள்ளது. மேலும் பொன்னை பாலு மற்றும் ராமு (எ) வினோத் என்பவரின் வங்கிக் கணக்குகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட 11 நபர்களின் கடந்த 6 மாத வங்கி பரிவர்த்தனைகளை போலீசார் அந்த குறிப்பிட்ட வங்கிகளிடம் கேட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவத்தன்று 5 இருசக்கர வாகனங்களில் வந்த 10 பேர் போலி நம்பர் பிளேட்டுக்களை பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட அந்த இருசக்கர வாகன உரிமையாளர்களிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதே போல கொலையாளிகளை அவர்களது வீட்டுக்கு அழைத்துச் சென்று தேவைப்பட்டால் அங்கு சோதனை செய்யவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
தென் மாவட்டத்தில் பயன்படுத்தும் கத்தியோடு ஓடி வருவதாக சந்தேகிக்கக்கூடிய ராமு (எ) வினோத், அந்த கத்தியை யாரிடம் இருந்து வாங்கினார் என விசாரணை செய்து வருகின்றனர். இந்த ராமு, ஆற்காடு சுரேஷின் மாங்காடு கிளப்பில் வேலை செய்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த 11 பேரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஸ்கெட்ச் போட்டு கொடுத்த வழக்கறிஞர்: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அருள் பூந்தமல்லி, திருவள்ளூர் நீதிமன்ற வழக்கறிஞர். இவர் ஆற்காடு சுரேஷின் மைத்துனர் உறவு முறையாகும். மேலும் ஆற்காடு சுரேசுடன் 12 வருடங்கள் இருந்துள்ளார். சுரேஷின் வழக்குகளையும் கையாண்டு வந்துள்ளார்.
வழக்கறிஞர் என்பதால் தனது நண்பர்களான வழக்கறிஞர்களை ஆம்ஸ்டாராங்கின் அருகிலேயே வைத்து அவர் எங்கு செல்கிறார், யாரையெல்லாம் சந்திக்கிறார், எந்தெந்த நேரங்களில் எங்கு இருப்பார் என்பதை அருள் முழுமையாக திரைப்பட பாணியில் கண்காணித்துள்ளது தெரிய வந்தது. அவர்களுக்கு உடந்தையாக கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி திருமலை செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆம்ஸ்ட்ராங் உடனிருந்த சிலரை வைத்தே அருள் கண்காணிப்பை நடத்தினாரா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கறிஞர்கள் போர்வையில் உடனிருந்து நோட்டமிட்டு அருளுக்கு தகவல்கள் பகிரப்பட்டதா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
அருள் தான் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான ஸ்கெட்ச் போட்டு கொடுத்ததாகவும், பொன்னை பாலு ஆட்கள்தான் கொலை சம்பவத்தை அரங்கேற்றி இருப்பதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொலைக்கான ஆயுதங்களை வாங்கி கொடுத்ததும் அருள்தான் என்பதும் தெரிய வந்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. ஆற்காடு சுரேஷிடம் இருந்த பழைய ஆயுதங்களோடு, அருள் வாங்கி கொடுத்த ஆயுதங்களையும் சேர்த்து பயன்படுத்தி இந்த கொலையை அரங்கேற்றியுள்ளனர். சம்பவம் முடிந்த பிறகு ஆயுதங்களை அருளிடம் தான் பொன்னை பாலு கூட்டாளிகள் ஒப்படைத்ததாகவும் தெரிய வந்துள்ளது.
போலீஸ் காவலில் அருளிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் ஆயுதங்களை அவர் திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ், அருளின் அக்கா மகன் நரேஷ், சீனிவாசன் ஆகியோர் வீட்டில் பதுக்கி வைத்திருந்தது தெரிந்து போலீசார் அதனை கைப்பற்றி உள்ளனர். மேலும் சதீஷ், நரேஷ், சீனிவாசன் ஆகிய மூன்று பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் இந்த வழக்கில் அருளுக்கு ஒரு வழக்கறிஞர் உதவியதாகவும் கூறப்படுகிறது. அவர் யார் என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர். வழக்கறிஞர் என்பதால் தனது நண்பர்களான வழக்கறிஞர்களை ஆம்ஸ்டாராங்கின் அருகிலேயே வைத்து அவர் எங்கு செல்கிறார், யாரையெல்லாம் சந்திக்கிறார், எந்தெந்த நேரங்களில் எங்கு இருப்பார் என்பதை அருள் முழுமையாக திரைப்பட பாணியில் கண்காணித்துள்ளது தெரியவந்தது.
* ஜெயபாலின் சதி வலை?
கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷுக்கும், ஒற்றைக்கண் ஜெயபால் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் குற்றவாளியாக ஒற்றை கண் ஜெயபால் மற்றும் கூலிப்படை கும்பலை போலீசார் கைது செய்தனர். பின்னர், ஜாமீனில் வெளியே வந்த ஜெயபால், நிலம் சம்பந்தமான பஞ்சாயத்து ஒன்றில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அவருக்கு எதிராக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு வந்துள்ளார். ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருவரும் அமர்ந்து பஞ்சாயத்து பேசும்போது ஜெயபால், ‘‘இந்த விஷயம் ஆம்ஸ்ட்ராங் அண்ணன் தொடர்புடையது. அதனால், நீ தலையிடாதே. இல்லையென்றால், உனது அண்ணனை வெட்டி கொலை செய்தது போல், உன்னையும் வெட்டி கொலை செய்து விடுவதாக ஆம்ஸ்ட்ராங் அண்ணன் எச்சரித்துள்ளார்,’’ என பொன்னை பாலுவை மிரட்டி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பொன்னை பாலு, எனது அண்ணனையும் கொலை செய்துவிட்டு என்னையும் கொன்றுவிடுவதாக ஆம்ஸ்ட்ராங் மிரட்டுவதாக நினைத்து, தனது கூட்டாளிகளை ஒன்று திரட்டி இந்த கொலையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 11 பேரிடம் விசாரணை 10 நாளாக நோட்டமிட்டு தீர்த்துக்கட்டியது அம்பலம்: முக்கிய குற்றவாளியின் வங்கி கணக்கு ஆய்வு; பின்னணியில் யார் என போலீசார் தீவிர விசாரணை appeared first on Dinakaran.