மதுரை: மதுரையில் இருந்து விமானம் மூலம் அயோத்திக்கு 106 பேரை அழைத்துச் செல்வதாக, அவர்களிடம் பணம் வசூலித்து ஏமாற்றிய டிராவல்ஸ் நிறுவனம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். மதுரையில் இருந்து அயோத்திக்கு விமானம் மூலம் 106 பயணிகளை சுற்றுலா அழைத்துச் செல்வதாக கூறி, சேலத்தை சேர்ந்த ஜே.பி.டிராவல்ஸ் என்னும் தனியார் நிறுவனம், ஒவ்வொருவரிடமும் விமானக் கட்டணம், தங்கும் இடத்திற்கு கட்டணம் என தலா ரூ.29 ஆயிரம் வசூலித்துள்ளனர். இன்று காலை 8 மணிக்கு மதுரை விமான நிலையத்தில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் பெங்களூரு சென்று, அங்கிருந்து அயோத்திக்கு செல்வதாக இருந்தது. இதன்படி, பணம் கட்டிய 106 பேரும் இன்று காலை 8 மணிக்கு மதுரை விமானநிலையம் வந்தனர்.
பின்னர் அனைவரும் பெங்களூரு செல்வது தொடர்பாக இண்டிகோ விமான நிறுவனத்தில் கேட்டனர். இதற்கு அவர்கள் பெங்களூருக்கு யாரும் டிக்கெட் புக் செய்யவில்லை என தெரிவித்துள்ளனர். இதைகேட்டு 106 பயணிகளும் அதிர்ச்சியடைந்தனர். இதை தொடர்ந்து கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இது குறித்து விமான நிலைய போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில், சேலம் ஜே.பி. டிராவல்ஸ் மேலாளார் ராஜா பயணிகளிடம் தொடர்பு கொண்டு பேசி, அவர்களை வரும் 18ம் தேதி அயோத்தி அழைத்து செல்வதாக உறுதி கூறினார். இதையடுத்து பயணிகள் சமாதானம் அடைந்தனர். பின்னர் 106 பேரும் சேலம் புறப்பட்டு சென்றனர்.
The post அயோத்தி அழைத்துச் செல்வதாக 106 பேரிடம் பணம் வசூலித்து ஏமாற்றிய டிராவல்ஸ் நிறுவனம்: மதுரை விமானநிலையத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.