புனே: என் மகள் தற்கொலை செய்து கொண்டால், உங்களை சிறைக்கு அனுப்புவேன் என்று சர்ச்சை பெண் உதவி கலெக்டரின் தாய் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார். குடிமைப் பணித் தேர்வில் (ஐஏஎஸ்) தேர்ச்சி பெற்ற டாக்டர் பூஜா கேத்கர் (34) என்பவர், சமீபத்தில் புனே உதவி ஆட்சியராக நியமிக்கப்பட்டார். ஆனால் அவர் தனது அதிகாரத்துக்கு மீறிய சில நடைமுறைகளை பின்பற்றி வந்தார். அதாவது சொந்த வாகனத்தில் மகாராஷ்டிர அரசு என்று ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டதோடு, சைரன் ஒலியையும் பொருத்திக்கொண்டார். கூடுதல் ஆட்சியரின் அலுவலகத்தையும் முன் அனுமதியின்றி அபகரித்துக்கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுபோல, பூஜாவின் தந்தை ஓய்வுபெற்ற நிர்வாக அதிகாரி என்றும், அவர் அண்மையில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார் என்றும், தனது மகளின் விருப்பங்களை நிறைவேற்றுமாறு ஆட்சியர் அலுவலக ஊழியர்களுக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், பூஜாவின் தந்தைக்கு ரூ.40 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாகவும், ஆனால் இவரோ ஓபிசி பிரிவின்கீழ் இப்பதவிக்குத் தேர்வாகியிருப்பதாகவும், இவரது தேர்வே கேள்விக்குறியாக இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதுமட்டுமின்றி, அவர் தன்னை பார்வை மாற்றுத்திறனாளி எனக் கூறி சான்றிதழ் கொடுத்து தேர்ச்சி பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பூஜா தனது சொகுசு வாகனத்தில் சைரன் பொருத்தி இருந்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். தற்போது அது வைரலாகி, பெரும் பிரச்னையைக் கிளப்பியிருக்கிறது. இதனால், பூஜா கேத்கர், புனேவிலிருந்து வாஷிமுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். முன்னதாக நேற்று பூஜா கேத்கர் வீட்டுக்குச் சென்ற போலீசார், அவரது காரை ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து அவரது பங்களாவுக்கு சென்ற போது, பங்களாவின் கதவுகள் பூட்டப்பட்டிருந்தன. ஆனால் அந்த பங்களாவின் வளாகத்தில் இருந்த பூஜா கேத்கரின் தாய் மனோரமா கேத்கர், செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களையும், அதிகாரிகளையும் ஒருமையில் பேசி அச்சுறுத்தினார். அவர் பேசிய வீடியோ தற்போது வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில், ‘என் மகள் தற்கொலை செய்து கொண்டால், உங்கள் (பத்திரிகையாளர்கள்) அனைவரையும் சிறைக்கு அனுப்புவேன்’ என்று கூறினார். இதற்கிடையே வாஷிமிற்கு இடமாற்றம் செய்யப்பட்ட பூஜா கேத்கர், தனது அலுவலகத்திற்கு பொலிரோ காரில் வந்தார். பயிற்சி உதவி ஆட்சியராக இருக்கும் போது, இத்தனை ஆட்டம் போடும் பூஜா கேத்கரை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
The post ரூ.40 கோடி சொத்து, சைரன் வாகனம், போலி சான்றிதழ் விவகாரம்; என் மகள் தற்கொலை செய்து கொண்டால் உங்களை சிறைக்கு அனுப்புவேன்: சர்ச்சை பெண் உதவி கலெக்டரின் தாய் மிரட்டல் appeared first on Dinakaran.