×
Saravana Stores

காதலிக்க வற்புறுத்தி 2 பேர் டார்ச்சர் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

திருமலை: தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் சிந்தலகுடத்தை சேர்ந்த தம்பதி ராமலிங்கம்-ராஜிதலா. இவர்களது மகள் கல்யாணி(19). அதே கிராமத்தை சேர்ந்தவர்கள் சிவா (25), மது (24). இவர்கள் கல்யாணியை ஒருதலையாக காதலித்துள்ளனர். தங்களது காதலை தெரிவித்தபோது அதை ஏற்க கல்யாணி மறுத்துவிட்டார். ஆனால் தொடர்ந்து காதல் டார்ச்சர் செய்துள்ளனர். மேலும், எங்களை காதலிக்காவிட்டால், உன் போட்டோவை ஆபாசமாக மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என்று இருவரும் மிரட்டி உள்ளனர். கடந்த 6ம்தேதி சர்வாரம் கிராமத்தில் கல்யாணியின் உறவினர் ஒருவர் இறந்துவிட்டார். இந்த துக்க நிகழ்ச்சிக்கு கல்யாணியின் பெற்றோர் சென்றுவிட்டனர். கல்யாணி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

இதையறிந்த மதுவும், சிவாவும் மாறி மாறி போன் செய்து கல்யாணிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளனர். இதனால் மன வேதனை அடைந்த கல்யாணி, வீட்டில் விவசாயத்திற்காக வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார். துக்க நிகழ்ச்சிக்கு சென்றிருந்த தனது பெற்றோரை செல்போனில் தொடர்பு கொண்டு விவரத்தை கூறியுள்ளார். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பக்கத்து வீட்டாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது கல்யாணி மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

உடனே அவரை மீட்டு மிரியாலகுடா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். முதலுதவி சிகிச்சைக்கு பிறகு நல்கொண்டாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கல்யாணி இறந்தார். இதுகுறித்து அவரது தாய் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு சடலம் நேற்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கல்யாணியின் மரணத்திற்கு காரணமான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறி பெற்றோர், உறவினர்கள் மற்றும் அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நேற்று சடலத்துடன் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார், கல்யாணி நீதிபதியிடம் மரண வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதன்பேரில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இந்நிலையில் கல்யாணி மரண வாக்குமூலத்தில் தனது பெயரையும் தெரிவித்ததை அறிந்த மது, அதிக மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றொரு வாலிபர் சிவாவை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

The post காதலிக்க வற்புறுத்தி 2 பேர் டார்ச்சர் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Torcher ,Ramalingam ,Rajidala ,Sindalakudam, Nalgonda District, Telangana State ,Kalyani ,Shiva ,Dadu ,
× RELATED ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டமளிப்பு விழா