×
Saravana Stores

யூரோ கோப்பை கால்பந்து அரையிறுதி போட்டி; நெதர்லாந்தை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி: இறுதி போட்டியில் ஸ்பெயினுடன் மோதல்

முனிச்: 17வது யூரோ கோப்பை கால்பந்து தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் முதல் அரை இறுதியில் ஸ்பெயின் பிரான்ஸை வென்று பைனலுக்கு சென்றது. இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு நடந்த 2வது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து- நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டத்தின் 7வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் செவி சிம்மன்ஸ் முதல் கோலை அடித்தார். தொடர்ந்து ஆட்டத்தின் 18 வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் டென்சில் செய்த பவுலால் இங்கிலாந்துக்கு பெனால்டி கிடைத்தது. இதனை பயன்படுத்திக் கொண்ட இங்கிலாந்து வீரர் ஹாரி கேன் அதனை கோலாக்கினார். இதனையடுத்து பரபரப்பாக நடந்த 2வது பாதியில் ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் கோல் பால்மர் கொடுத்த பாசை சப்ஸ்டியூட்டாக வந்த ஆலி வேட்கின்ஸ் கோலாக மாற்றினார். இதன் மூலம் இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் தொடர்ந்து 2வது முறையாக யூரோ கோப்பை பைனலுக்கு இங்கிலாந்து தகுதி பெற்றுள்ளது.

கடந்த முறை யூரோ கோப்பை பைனலில் இத்தாலி அணியிடம் இங்கிலாந்து அணி பெனால்டி சூட் அவுட் முறையில் தோல்வியை தழுவியது. இதனால் இம்முறையாவது இங்கிலாந்து சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால் தற்போது மூன்று முறை சாம்பியன் ஆன ஸ்பெயின் அணி இங்கிலாந்துக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை யூரோ கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின், இங்கிலாந்து அணிகள் மூன்று முறை மோதி உள்ளனர். இதில் இங்கிலாந்து இரண்டு முறை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. வரலாற்று சிறப்புமிக்க இந்த இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு (இந்திய நேரப்படி நள்ளிரவு 12:30 மணிக்கு) நடைபெறுகிறது.

 

The post யூரோ கோப்பை கால்பந்து அரையிறுதி போட்டி; நெதர்லாந்தை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி: இறுதி போட்டியில் ஸ்பெயினுடன் மோதல் appeared first on Dinakaran.

Tags : Euro Cup Football Semi-Finals ,England ,Netherlands ,Spain ,Munich ,17th Euro Cup football ,Germany ,France ,Euro Cup football ,Dinakaran ,
× RELATED விக்டோரியா பொது அரங்கு மறுசீரமைப்பு...