×
Saravana Stores

மகனுடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் 7 சவரன் பறிப்பு முகமூடி அணிந்து மர்ம நபர்கள் அட்டகாசம் வேலூர் பாலாற்று மேம்பாலத்தில்

வேலூர், ஜூலை 11: வேலூர் பாலாற்று மேம்பாலத்தில் மகனுடன் பைக்கில் சென்ற தாயிடம் 7 சவரன் நகையை பறித்த முகமூடி கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் சத்துவாச்சாரி காந்திநகர் புத்தர் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு கரிகிரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 8ம் தேதி அதிகாலை வீடு கிரகப்பிரவேசத்திற்காக தனது தாய் மீராபாயுடன் சுரேஷ் குமார் பைக்கில் சென்று கொண்டிருந்தார். வேலூர் புதிய பாலாற்று மேம்பாலத்தில் சென்றபோது இவர்களது பின்னால் ஒரே பைக்கில் 3 மர்ம நபர்கள் கைகுட்டையால் முகமூடி அணிந்தபடி வந்து, திடீரென மீராபாயிடம் இருந்த பையை பிடுங்கிக் கொண்டு பைக்கில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சுரேஷ்குமார் இது குறித்து வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். முகத்தை மூடிக்கொண்டு வந்து பெண்ணிடம் அதிகாலையில் நகையை பறித்துச் சென்ற சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post மகனுடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் 7 சவரன் பறிப்பு முகமூடி அணிந்து மர்ம நபர்கள் அட்டகாசம் வேலூர் பாலாற்று மேம்பாலத்தில் appeared first on Dinakaran.

Tags : Vellore ,Suresh Kumar ,Gandhinagar Buddha Street, ,Sathuvachari ,Tamil Nadu ,
× RELATED காட்பாடி அருகே பயணிகள் ரயிலின்...