- சின்னஅல்லாபுரம் தொடக்கப்பள்ளி
- வேலூர்
- வேலூர் சின்னஅல்லபுரம்
- வேலூர் சின்னஅல்லாபுரம் தொடக்கப்பள்ளி
- தின மலர்
வேலூர், ஜூலை 10: வேலூர் சின்னஅல்லாபுரத்தில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரை மாற்றக்கூடாது என்பதை வலியுறுத்தி மாணவர்கள் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர் சின்னஅல்லாபுரம் பிரதான சாலையையொட்டி 15 ஆண்டுகளுக்கு முன்பு நிதியுதவி பள்ளி தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. பாழடைந்த ஓட்டு கட்டிடத்தில் இயங்கும் இப்பள்ளியில் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் படித்து வந்தனர். இப்பள்ளி நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், பள்ளியை மேம்படுத்தாமல் நிதியுதவி பள்ளி நிர்வாகம் மெத்தனமாக செயல்படுவதாகவும் கூறி அப்பகுதி மக்கள் தொடர்ந்து நடத்திய போராட்டம் காரணமாக, அப்பள்ளியை எஸ்எஸ்ஏ திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு கையகப்படுத்தியது.
தற்போது மாநகராட்சி தொடக்கப்பள்ளியாக இயங்கி வரும் அப்பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. அதற்கேற்ப பள்ளிக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன. தற்போது அங்கு 200 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடந்து வரும் நிலையில் இப்பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்குமாரும் பொதுமாறுதல் பெற்று சென்று விடுவார் என்று தகவல் வெளியானது. இதையறிந்த அப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் நேற்று காலை 8.30 மணியளவில் பள்ளி அருகில் கூடினர். அவர்கள் பள்ளியை முற்றுகையிட்டு நின்றனர். அவர்களிடம் தாசில்தார் முரளிதரன், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் தயாளன், இன்ஸ்பெக்டர் காண்டீபன், பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். எந்த பிரச்னை என்றாலும், முறையாக அதிகாரிகளிடம் அணுக வேண்டும். ஆகவே நீங்கள் கலெக்டரிடம் சென்று முறையிடுங்கள். போராட்டத்தை கைவிட வேண்டும் என்று அறிவுறுத்தினர். இதையேற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அங்கு சுமார் அரை மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
The post தலைமை ஆசிரியரை இடம் மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் முற்றுகை அதிகாரிகள், போலீசார் பேச்சுவார்த்தை வேலூர் சின்னஅல்லாபுரம் தொடக்கப்பள்ளியில் appeared first on Dinakaran.