×
Saravana Stores

தாய்ப்பால் சுரக்க உதவும் சில உணவுகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

புதிதாக பிறந்த குழந்தை நல்ல வளர்ச்சியுடனும் ஆரோக்கியமாகவும் வளர தாய்ப்பால் மிகவும் முக்கியமானது. மேலும், பச்சிளம் குழந்தைகளுக்கு தொற்றுகள் ஏற்படுவதிலிருந்து பாதுகாத்து அவர்களின் நோயெதிர்ப்பு சக்தியை மிகவும் வலுவாக வைப்பதிலும் தாய்ப்பால் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், இன்றைய சூழ்நிலையில், பெரும்பாலான இளம் தாய்மார்கள் சந்திக்கும் பிரச்னை என்றால் அது பால் சுரப்பு குறைவாக இருப்பதுதான். இதற்கு, நன்கு சத்துள்ள உணவுகளை சாப்பிட்டாலே தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க முடியும். அந்த வகையில், சில உணவுகளை பார்ப்போம்.

முருங்கைக் கீரையுடன் துவரம்பருப்பு சேர்த்து சமைத்து பகல் உணவுடன் ஒருநாள் விட்டு ஒரு நாள் சாப்பிட பால் சுரப்பு அதிகரிக்கும்.சுரைக்காயைப் பாசிப்பருப்புடன் சீரகம் சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வர பால்சுரப்பு அதிகரிக்கும்.முற்றிய பப்பாளிக்காயை சிறுபருப்புடன் சேர்த்து கூட்டாகவோ அல்லது மற்ற காய்கறிகளுடன் சேர்த்து சமைத்து சாப்பிடலாம். வெள்ளைப்பூண்டை தோல்நீக்கி, பல்லுபல்லாக எடுத்து நெய்யில் வதக்கி, பாலில் வேகவிட்டு, தேவையெனில் சர்க்கரை சேர்த்து அருந்தி வர பால் சுரப்பு அதிகரிக்கும்.காலையில் ஒரு டம்ளர் பசும்பாலில் இரண்டு பாதாம் பருப்பை பொடித்து சேர்த்து அதனுடன் தேவையான கற்கண்டுதூள் சேர்த்து பருகிவர பால் வளம் அதிகரிக்கும்.கேழ்வரகில் சமைத்த உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள பால்சுரப்பு அதிகரிக்கும்.

ஓரிதழ் தாமரையின் இலையை அம்மியில் அரைத்து கொட்டைப் பாக்களவு எடுத்து ஆழாக்கு பசும்பாலில் கலந்து காலையில் மட்டும் ஒரு வாரம் பருகிட பால் நன்கு சுரக்கும்.
சுறாமீனை குழம்பாகவோ, புட்டாகவோ செய்து உண்டு வந்தால் தாய்ப்பால் அதிகமாகும்.பார்லி கஞ்சி குடிக்க, தாய்ப்பால் சுரப்பு நன்றாக இருக்கும். முட்டை, மீன், பச்சைப்பயறு போன்ற உணவுப் பொருள்களை நாள்தோறும் சேர்த்துவர பால் சுரப்பு அதிகரிக்கும்.தரைப்பசலைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துவர தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

அரைக்கீரையுடன் பூண்டு, மிளகு சேர்த்து பொரியலாக சமைத்து சாப்பிட்டுவர பால்சுரப்பு அதிகரிக்கும்.கோஷ்டம், அமுக்கிராங்கிழங்கு, வசம்பு, யானைத் திப்பிலி ஆகியவற்றை நன்றாக அரைத்து மார்பகத்தில் பற்றாக போட்டால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.அம்மான்பச்சரிசி கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள பால் சுரப்பு நன்றாக இருக்கும்.

தொகுப்பு: மகாலட்சுமி சுப்ரமணியன்

The post தாய்ப்பால் சுரக்க உதவும் சில உணவுகள்! appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED விபத்தில் புதுவை தினகரன் பொது மேலாளர் பலி