×
Saravana Stores

ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்கள்: ஐபிசி, பிஎன்எஸ் சட்டமாக மாறியது? சாதக, பாதகங்கள் என்ன? சட்ட வல்லுநர்கள் கருத்து

சட்டத்துறை வல்லுநர்களையும், நீதித்துறை நிபுணர்களையும் கலந்து ஆலோசிக்காமல் ஒன்றிய அரசு, தன்னிச்சையாக கொண்டு வந்துள்ள மூன்று புதிய சட்டங்களும், தேவையற்ற குழப்பங்களையும், நீதி பரிபாலனையில் தாமதத்தையும் ஏற்படுத்தும் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள், வழக்கறிஞர்கள், பொதுமக்களும் இதற்கு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம் ஆகியவற்றின் பெயர்களை பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்), பாரதிய சாக்‌ஷியா அதிநியாம் (பிஎஸ்ஏ) என்று சமஸ்கிருத வார்த்தைகளுக்கு மாற்றம் செய்தும் இந்த மூன்று சட்டங்களின் பிரிவுகளிலும் மாற்றங்கள் செய்தும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 11ம் தேதி நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் இரு அவைகளிலும் எந்த விவாதமும் நடத்தாமல் எதிர்கட்சிகள் இல்லாமல் இந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

சட்டப் பிரிவுகளின் வரிசை எண் மட்டுமல்லாமல், குற்றம் மற்றும் தண்டனை விவரங்களிலும் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த சட்டங்கள் ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், நாடெங்கிலும் இந்த சட்டங்களில் செய்யப்பட்ட மாற்றங்களுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல மாநில முதல்வர்கள் இந்த சட்டங்களில் கொண்டு வரப்பட்ட பெயர் மற்றும் உட்பிரிவுகளின் மாற்றங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன் உடனடியாக அதை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

தமிழகத்தில் இந்த சட்டங்களில் செய்யப்பட்ட மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த மாற்றங்களை திரும்ப பெற வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை, மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள வழக்கறிஞர்கள் சங்கங்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். மாவட்ட நீதிமன்றங்களில் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டமும் நடைபெற்று வருகிறது. இந்த சட்டங்களில் செய்யப்பட்ட மாற்றங்களால் நீதித்துறையில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. புதிய சட்டத்தை படித்து வழக்கு நடத்துவது மிக சிரமம். இது விசாரணை நீதிமன்றங்களின் நீதி பரிபாலனையில் பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிடும் என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது மட்டுமல்லாமல், காவல்துறையினருக்கும் இந்த சட்ட மாற்றங்கள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி விடும். இந்திய தண்டனை சட்டத்தில் கொண்டு வரப்பட்ட மாற்றங்களில் 90 சதவீத பிரிவுகளிலும், உட்பிரிவுகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், வழக்கு பதிவு செய்யும்போது சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிக்கும் குழப்பம் ஏற்படும். இது ஒருபுறம் இருந்தாலும், ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ள வழக்குகளை முந்தைய சட்டத்தின்படியும், ஜூலை 1ம் தேதிக்கு பிறகு பதிவு செய்யப்படும் வழக்குகளை புதிய சட்ட பிரிவுகளின்படியும் விசாரிக்க வேண்டிய நிலை விசாரணை நீதிமன்ற நீதிபதிகளுக்கு ஏற்பட்டுள்ளது என்று நிபுணர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

முக்கியமாக இந்த சட்டங்களில் பிரிவினைச் செயல்கள், ஆயுதமேந்திய கிளர்ச்சி, நாசகார நடவடிக்கைகள், பிரிவினைவாத நடவடிக்கைகள் அல்லது இந்தியாவின் இறையாண்மை அல்லது ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தை விளைவிப்பது தொடர்பான புதிய குற்றம் ஒன்றும் இந்த புதிய சட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த குற்றங்களுக்கு தண்டனை வழங்கும் விதிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளது. நாடு முழுக்க பல இடங்களில் பாஜவிற்கு எதிராக போராட்டங்கள் நடக்கும் நிலையில்தான் ஆயுதமேந்திய கிளர்ச்சி, நாசகார நடவடிக்கைகள், பிரிவினைவாத நடவடிக்கைகள் அல்லது இந்தியாவின் இறையாண்மை தொடர்பான புதிய சட்ட விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

அதனால், இந்த சட்ட பிரிவுகளை தவறாக பயன்படுத்தும் நிலை கண்டிப்பாக வந்துவிடும் என்றும் சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்டுள்ள சட்டம் என்பதால் மாற்றம் செய்கிறோம் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், இந்த 3 சட்டங்களிலும் நம் நாட்டின் சூழலுக்கு ஏற்ப பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்ட பிறகுதான் இந்தியாவில் இந்த சட்டங்கள் நடைமுறைக்கு வந்தன. அது மட்டுமல்லாமல் குற்றவியல் நடைமுறை சட்டத்தில் அதிக அதிகாரம் நிர்வாகத் துறைக்கு தரப்பட்டிருந்த நிலையில் அந்த அதிகாரத்தை நீதித்துறைக்கு தரும் வகையில் கடந்த 1973ல் மாற்றம் செய்யப்பட்டது. அதனால், இது ஆங்கிலேயர் ஆட்சி காலத்தைய சட்டம் என்று கூறுவதை ஏற்க முடியாது என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்திய தண்டனை சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை அந்த சட்டத்தின்படிதான் முடிக்க முடியும். அப்படிப்பட்ட நிலையில் நிலுவையில் உள்ள லட்சக்கணக்கான குற்ற வழக்குகளை முடிப்பதற்கு இன்னும் 40 ஆண்டுகள் ஆகும். அதுவரை இரண்டு சட்ட பிரிவுகளின் கீழும் நீதிமன்றங்கள் வழக்குகளை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். உச்ச நீதிமன்றத்தில் மட்டும் 17,804 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளை முடிப்பதற்கு சுமார் 20 ஆண்டுகள் ஆகலாம். அடுத்த 30 ஆண்டுகளுக்கு இரண்டு குற்றவியல் நீதி பரிபாலனங்களை நீதித்துறை சந்திக்க வேண்டிவரும். இந்த விஷயத்தில் தலைக்கு மேல் வாள் தொங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை சரிவர ஆலோசித்த தீர்வு கண்டபிறகே சட்டத்தை அமலுக்கு கொண்டு வந்திருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் இந்திரா செய்சிங் தெரிவித்துள்ளார்.

* போராட்டம் நடத்தினாலே தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் அபாயம்
இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன் கருத்து தெரிவிக்கையில், நிர்வாகத்திடம் இருந்த பல அதிகாரங்களை நீதித்துறைக்கு மாற்றம் செய்து குற்றவியல் நடைமுறை சட்டத்தில் 1973ல் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்திய தண்டனை சட்டத்தில் கூறப்பட்டுள்ள 80 சதவீத சட்டப் பிரிவுகளில் தரப்படும் தண்டனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. காவல்துறைக்கு அதிக அதிகாரம் தரப்பட்டுள்ளது. ஒருவரை கைது செய்து ரிமாண்ட் செய்த 15 நாட்களுக்குள் போலீஸ் காவலில் எடுத்த விசாரிக்க இந்திய தண்டனை சட்டத்தில் (ஐபிசி) வகை செய்யப்பட்டுள்ளது. ஆனால், தற்போது கொண்டு வரப்பட்டுள்ள பாரதிய நியாய சன்ஹிதாவில் (பிஎன்எஸ்) போலீஸ் காவல் கேட்பதற்கு காவல்துறைக்கு 40 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை அவகாசம் தரப்பட்டுள்ளது.

இதனால், சாதாரண குற்றங்கள் செய்தவர்களுக்கும் ஜாமீன் கிடைப்பது மிக கடினமாகும். மேலும் ஆர்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தினாலும் அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை பிரயோகிக்க முடியும். அந்த அளவுக்கு இந்த சட்டத்தில் அரசியலமைப்பில் தரப்பட்ட உரிமைகளுக்கு எதிரான சரத்துகள் சேர்க்கப்பட்டுள்ளன. சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு முன்பு சட்ட நிபுணர்கள், நீதித்துறை நிபுணர்களிடம் ஆலோசனை நடத்தி, சம்மந்தப்பட்டவர்களிடம் கருத்து கேட்டு அதன் பிறகுதான் திருத்தம் செய்திருக்க வேண்டும்.

ஆனால், ஒன்றிய உள்துறை அமைச்சர் இந்த சட்டத்தின் பெயர்களையும், பிரிவுகளையும் மாற்றம் செய்யும் மசோதாவை தாக்கல் செய்துவிட்டு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், அவர்களை வெளியேற்றிவிட்டு மசோதாவை நிறைவேற்றியுள்ளார். இதிலிருந்தே இந்த மாற்றத்தில் உள்நோக்கம் உள்ளது என்பதை தெளிவாக அறிந்து கொள்ளலாம். இதில் வருத்தப்பட வேண்டியது என்னவெனில் தமிழகம் மற்றும் ஒரு சில மாநிலங்களை தவிர இந்த மாற்றத்திற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பாததுதான். இந்த சட்ட பிரிவுகளில் மாற்றம் செய்திருப்பதால் தேவையில்லாத குழப்பங்களும், நீதி பரிபாலனையில் தாமதமும்தான் ஏற்படும். இது அனுமதிக்கக் கூடியதல்ல என்றார்.

* இந்திய தண்டனை சட்டப் பிரிவுகளில் மாற்றம் சரியா?
இதுகுறித்து முன்னாள் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் எம்.முகமது ரியாஸ் கூறியதாவது: இந்திய தண்டனை சட்டத்தில் கொலை குற்றம் உள்ளிட்ட கொடுங்குற்றங்களுக்கு ஆயுள் தண்டனை என்று மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், புதிய சட்டமான பாரதிய நியாய சன்ஹிதாவில் ஆயுள் தண்டனை என்பது குற்றவாளியின் எஞ்சிய வாழ்நாள் முழுவதும் என்று விளக்கப்பட்டுள்ளது. பலர் ஒன்று சேர்ந்து செய்யும் குற்றச்செயல்களான நில அபகரிப்பு, பொருளாதார குற்றங்கள், சைபர் கிரைம் குற்றங்களில் மரணம் ஏற்பட்டால் ஆயுள் தண்டனையும் குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்க புதிய சட்டத்தில் இடம் உள்ளது.

மரணம் இல்லாத இந்த குற்றங்களுக்கு 5 ஆண்டுகள் குறைந்த பட்ச தண்டனையும் ரூ.5 லட்சமும் அபராதமும் விதிக்க புதிய சட்டம் பிரிவு 111ல் வகை செய்யப்பட்டுள்ளது. புதிய சட்டப்பிரிவு 113ன்படி பயங்கரவாத செயல்கள், நாட்டின் ஒற்றுமைக்கோ, பாதுகாப்புக்கோ அச்சுறுத்தல் ஏற்படுத்தினால் அதுவும் தீவிரவாத செயல்தான். வெளிநாட்டில் இருந்துகொண்டு வன்முறையை தூண்டினாலும் அதுவும் தீவிரவாத செயல்தான். தன்னிச்சையாக கொடுங்காயம் விளைவித்து நிரந்தர ஊனம் ஏற்பட்டால் 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனைவரை விதிக்க புதிய சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.

* சமூக சேவை என்ற தண்டனை
அவதூறு செய்தல், பொது இடத்தில் குடிபோதையில் ஒழுங்கீனமாக நடத்தல், ரூ.500க்கும் குறைவான மதிப்புள்ள திருட்டு, அறிவிப்பு வெளியிட்டும் ஆஜராக மறுத்தல், அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 5 விதமாக குற்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு தண்டனையாக சமூக சேவை செய்ய வேண்டும் என்ற புதிய சட்டப் பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், என்ன விதமான சமூக சேவை என்று தெளிவுபடுத்தப்படவில்லை. நீதிமன்றம் தரும் சமூக சேவையே தண்டனையாக கொள்ளப்படும். புதிய சட்டத்தில் ‘பறித்தல்’ என்ற பிரிவு 304 சேர்க்கப்பட்டுள்ளது. செயின் உள்ளிட்ட பொருட்களை பறித்து செல்லுதல் போன்ற குற்றங்கள் இந்த பிரிவில் அடங்கும். இந்த குற்றத்திற்கு 3 ஆண்டுகள்வரை சிறை தண்டனை வழங்கப்படும் என்றார்.

* அரசியலமைப்பின் 348வது பிரிவுக்கு முரணானது
இந்த சட்டங்கள் தொடர்பாக மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை திமுக உறுப்பினருமான பி.வில்சன் கூறும்போது, இந்த புதிய சட்டங்கள் நாட்டின் ஒவ்வொரு குடிமகன் மீதும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். மூன்று சட்டங்களின் தலைப்பு ஆங்கிலத்திலும், சட்ட பிரிவுகள் மற்றும் உள்ளடக்கங்கள் ஆங்கிலத்திலும் உள்ளன. இது அரசியலமைப்பு ஷரத்து 348க்கு முரணானது. இந்த மூன்று சட்டங்களை கையாள்வதும் உச்சரிப்பதும் இந்தி பேசாத மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும். சட்டத்தின் தன்மை குறித்து கீழ் மட்டத்தில் உள்ளவர்கள் எளிதாக புரிந்து கொள்ள வேண்டும். இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள காவல்துறையினருக்கும் இதனால் பெரும் சிரமம் ஏற்படும்.

புகாரின் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்வதில் குழப்பம் ஏற்பட்டுவிடும். இது நீதிமன்ற விசாரணையை பாதிக்கும். மூன்று சட்டங்களில் உள்ள காலனித்துவத்தை மாற்றியதை தவிர குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் கொண்டுவரப்படவில்லை. மின்னணு சாட்சியம், கூட்டுக்கொலை, மரண தண்டனை போன்ற சரத்துக்கள் சேர்த்திருக்கிறார்கள். இந்த 3 சட்டங்களையும் மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரி இந்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வாலிடம் வலியுறுத்தியிருக்கிறேன். மாநில அரசுகள், நீதிபதிகள், அகில இந்திய பார்கவுன்சில், மாநிலங்களின் பார்கவுன்சில்கள், வழக்கறிஞர்கள் சங்கங்கள், குற்றவியல் வழக்குகளில் புகழ்பெற்ற வழக்கறிஞர்கள், கல்வியாளர்களின் ஆலோசனை அவசியம். இதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன் என்றார்.

* அவசரமாக இந்த சட்டத்தை கையாள்வதில் குழப்பம்
வழக்கறிஞர் எம்.வேல்முருகன் கூறியதாவது: இந்திய தண்டனை சட்டம்தான் அடிப்படை சட்டம். புகார் மீது வழக்கு பதிவு செய்வதிலிருந்து தண்டனை வழங்கப்படும் வரை இந்திய தண்டனை சட்ட பிரிவுகள்தான் முக்கியம். சுமார் 150 ஆண்டுகளாக நீதிபதிகள், வழக்கறிஞர்கள், மக்கள் மனதில் பதிந்துள்ள இந்திய தண்டனை சட்ட பிரிவுகளை திடீரென்று மாற்றம் செய்திருப்பது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்திவிடும். சாதாரண மக்களுக்கும் சட்டத்தின் மீது விழிப்புணர்வை கொண்டுவந்துள்ள நிலையில் இப்போது மீண்டும் சட்ட அறிவை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இது துரதிஷ்டவசமானது. தொன்னூறு சதவீத இந்திய தண்டனை சட்ட பிரிவுகளின் எண்களை மாற்றியுள்ளனர். உதாரணமாக, மரணம் விளைவிக்கும் குற்றங்களான பிரிவு 304(ஏ) பிரிவு 105 என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மரணம் நிகழும் என்று தெரிந்திருந்தும் இந்த குற்றத்தை செய்தால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என்று சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவதூறு கருத்துக்களை வெளியிட்டால் இதற்கு முன்பு இந்திய தண்டனை சட்டம் பிரிவு 500ன்கீழ் 2 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படும். இப்போது, அந்த பிரிவு 356 என்று மாற்றப்பட்டுள்ளது. அவதூறு கருத்துக்களை பரப்பி ஒருவரின் மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்தினால் இந்த சட்ட பிரிவின் கீழ் 2 ஆண்டு சிறை தண்டனை அல்லது பொது சேவை செய்ய வேண்டும் என்று தீர்ப்பளிக்க மாஜிஸ்திரேட்டுக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளது.

மது அருந்திவிட்டு பொது இடத்தில் ஒழுக்கக் ேகடாக நடந்தாலும் சமூக சேவை செய்ய வேண்டும் என்ற தண்டனைதான். இதனால், குற்றங்கள்தான் அதிகரிக்கும். சிறு குற்றங்களுக்கும் இதே தண்டனை தர புதிய சட்டத்தில் இடம் தரப்பட்டுள்ளதால் சிறிய குற்றங்கள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்று பிரிவுகளின் எண்களை மாற்றம் செய்திருப்பது நீதிமன்ற விசாரணையிலும் குழப்பத்தை ஏற்படுத்திவிடும். இந்த புதிய சட்ட பிரிவை வழக்கறிஞர்களும், நீதிமன்றங்களும் கையாள்வதில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. காலப்போக்கில்தான மாற்றம் வரும். இந்த சட்டத்தை இவ்வளவு அவசரமாக கொண்டு வந்திருக்க கூடாது. இது வழக்கறிஞர்களுக்கும் புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

The post ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்கள்: ஐபிசி, பிஎன்எஸ் சட்டமாக மாறியது? சாதக, பாதகங்கள் என்ன? சட்ட வல்லுநர்கள் கருத்து appeared first on Dinakaran.

Tags : Union Government ,Dinakaran ,
× RELATED ஜிஎஸ்டியால் உருக்குலைந்த கிராமிய தொழில்கள்