×

திமுக சார்பில் கால்பந்து போட்டி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

 

புழல், ஜூன் 24: செங்குன்றம் அருகே திமுக சார்பில் நடத்தப்பட்ட கால்பந்து போட்டியை மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். சென்னை வடகிழக்கு மாவட்டம் சோழவரம் தெற்கு திமுக மற்றும் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் கலைஞரின் பிறந்தநாள் மற்றும் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு 15 வயதிற்கு உட்பட்ட கால் பந்து போட்டி மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான உபகரணங்கள் வழங்கும் விழா செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் அங்காள பரமேஸ்வரி கோவில் விளையாட்டு திடலில் நேற்று நடைபெற்றது.

விழாவுக்கு தெற்கு ஒன்றிய திமுக செயலாளரும் சோழவரம் ஒன்றியக்குழு துணைத் தலைவருமான வே.கருணாகரன் தலைமை தாங்கினார். மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் ஞானம் அனைவரையும் வரவேற்றார். நிர்வாகிகள் சன் முனியாண்டி, பாலசுந்தரம், ஆனந்தகுமார், நாகராஜ், அமிர்தராஜ், பரசுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாதவரம் எம்எல்ஏவுமான எஸ்.சுதர்சனம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கால் பந்து போட்டியை தொடங்கி வைத்தார்.

மேலும், விளையாட்டு வீரர்களுக்கு உபகரங்களை வழங்கினார். இந்த கால்பந்து போட்டியில், அண்ணாநகர், வில்லிவாக்கம், புழல், பாடிய நல்லூர், பட்டாபிராம், அயனம்பாக்கம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 16 அணிகள் கலந்து கொண்டன. இதில் சென்னை அண்ணா நகர் அணி முதல் இடத்தையும், வில்லிவாக்கம் அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தன. வெற்றி பெற்ற முதல் அணிக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கமும், இரண்டாவது அணிக்கு ரூ.8000 ரொக்கமும் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு பரிசுகள், நினைவு கேடயங்கள் ஆகியவை வழங்கப்பட்டன.

The post திமுக சார்பில் கால்பந்து போட்டி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : DMK ,MLA ,Puzhal ,Madhavaram Sudarsanam ,Sengunram ,Chennai North East District ,Cholavaram South DMK ,Dinakaran ,
× RELATED புழல் அருகே ஊராட்சி ஒன்றிய...