×
Saravana Stores

வருங்கால கணவர் திட்டியதால் ஐடி பெண் ஊழியர் தற்கொலை

திருவொற்றியூர்: மணலி புதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் சுவாதி (21), குரோம்பேட்டையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியில் சேர்ந்து, வீட்டில் இருந்தபடியே வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக குரோம்பேட்டையைச் சேர்ந்த தீபக்ராஜன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இவர்களது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வரவே, இரு வீட்டாரின் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் செய்துவைக்க முடிவு செய்யப்பட்டு நிச்சயதார்த்தமும் நடந்தது. அடுத்த மாதம் 7ம் தேதி திருமண தேதி முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணத்திற்காக ஆடைகள் வாங்க, குரோம்பேட்டையில் உள்ள பிரபல துணிக்கடைக்கு வருமாறு சுவாதியை தீபக்ராஜன் அழைத்துள்ளார். அதன்படி, சுவாதி சென்றபோது காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தீபக்ராஜன் லேட்டாக ஏன் வந்தாய் என்று கேட்டு சுவாதிக்கு துணி வாங்காமல் கோபித்துக்கொண்டு திரும்பி சென்றதோடு, வீட்டுக்கு சென்றவுடன் செல்போனில் சுவாதியை அழைத்து கடுமையாக திட்டியதாக தெரிகிறது. இதனால் சுவாதி மிகுந்த மன உளைச்சலில் அன்று இரவு வெகு நேரம் தூங்காமல் இருந்துள்ளார். பெற்றோர் அவரை சமாதானப்படுத்தி தூங்கச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று காலை மீண்டும் தீபக்ராஜன் சுவாதியை செல்போனில் அழைத்து துணி எடுக்க வருமாறு கூறியுள்ளார். அப்போது கடந்த முறை லேட்டாக வந்ததை சுட்டிக்காட்டி அதுபோல் இந்த முறையும் வரக்கூடாது எனக்கூறி மீண்டும் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த சுவாதி வீட்டின் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரத்தில் சுவாதியை காண அவரது அறைக்குச் சென்ற பெற்றோர் அங்கு சுவாதி தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர். தகவலறிந்த மணலி புதுநகர் போலீசார், சுவாதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post வருங்கால கணவர் திட்டியதால் ஐடி பெண் ஊழியர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Srinivasan ,Pudunagar ,Manali ,Swathi ,Crompettai ,
× RELATED நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது;...