×

காதலி நிராகரித்ததால் விரக்தி போலீஸ் ஸ்டேஷனில் விஷம் குடித்த சென்னை ஐ.டி. ஊழியர்: ஓமலூரில் பரபரப்பு

ஓமலூர்: சேலம் மாவட்டம் தாரமங்கலம் ஒன்றியம் ராமிரெட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த மாதையன் மகன் செல்வராஜூ (25) இன்ஜினியரிங் படித்து விட்டு, சென்னையில் தனியார் ஐ.டி. கம்பெனியில் வேலை செய்து வருகிறார். ஓமலூர் அருகேயுள்ள நல்லாகவுண்டம்பட்டியை சேர்ந்த ஒரு பட்டதாரி இளம்பெண், செல்வராஜூடன் வேலை செய்து வருகிறார். இருவரும் கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தே காதலித்து வந்துள்ளனர். பல்வேறு இடங்களுக்கு இருவரும் ஒன்றாக சென்று வந்துள்ளனர். இந்நிலையில், அந்த பெண்ணுக்கு பெற்றோர் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்துள்ளனர். அந்த மாப்பிள்ளை வேண்டாம் என்று கூறிய இளம்பெண், செல்வராஜூடன் ஊர் சுற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று, தனது பெற்றோருடன் ஓமலூர் காவல் நிலையத்திற்கு வந்த இளம்பெண், செல்வராஜூ மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், நண்பராக பழகிய செல்வராஜூ, இருவரும் சேர்ந்து எடுத்த போட்டோக்களை வைத்துக் கொண்டு, தன்னை மிரட்டுவதாக தெரிவித்துள்ளார். அதன் பேரில் விசாரணை நடத்துவதற்காக, செல்வராஜூவை போலீசார் காவல் நிலையத்திற்கு வரவழைத்தனர். காவல் நிலையம் வந்த செல்வராஜூ, அந்த பெண்ணிடம் பேச சென்ற போது, அவர் பேச மறுத்து விட்டார்.

என்னை காதலித்து விட்டு, ஏன் ஏமாற்றுகிறாய்? என கேட்டுக் கொண்டு அந்த பெண்ணின் அருகே சென்ற செல்வராஜூவை போலீசார் வெளியே இழுத்து தள்ளினர். இதனால், காவல் நிலையத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பிறகு போலீசார் செல்வராஜூவை வெளியே அனுப்பி விட்டு, இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அவர் செல்வராஜூ தனக்கு வேண்டாம் என கூறி விட்ட நிலையில், செல்வராஜூவோ காதலியை என்னுடன் சேர்த்து வையுங்கள் என்று போலீசாரிடமும், உறவினர்களிடமும் கூறினார். அப்போது, செல்வராஜூக்கு போலீசார் அறிவுரை கூறியுள்ளனர். இதனால், காவல் நிலையத்தின் பின்புறமாக சென்ற செல்வராஜூ, கையுடன் கொண்டு வந்த தூக்க மாத்திரைகள் மற்றும் விஷத்தை குடித்துவிட்டு மயங்கி விழுந்தார். இதனை கண்ட போலீசார், உடனடியாக அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் ஓமலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் குறித்து பெண்ணிடமும், பெண் வீட்டாரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post காதலி நிராகரித்ததால் விரக்தி போலீஸ் ஸ்டேஷனில் விஷம் குடித்த சென்னை ஐ.டி. ஊழியர்: ஓமலூரில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai I.D. ,Omalur ,Matayan ,Selvaraju ,Ramirettipatti ,Salem district ,Taramangalam ,Chennai ,Nallakaundampatti ,Selvarajudan… ,Dinakaran ,
× RELATED அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து கேள்வி...