×

விதிகளை மீறி இயக்கப்பட்ட பிற மாநில பதிவெண் கொண்ட பஸ்கள் மட்டுமே முடக்கம்: அமைச்சர் சிவசங்கர் தகவல்

சென்னை: போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு முழுவதும் 1,535 ஆம்னி பேருந்துகள் தமிழ்நாட்டில் பதிவு செய்து முறையாக இயங்கி வருகின்றன. இவைதவிர 943 ஆம்னிப் பேருந்துகள் பிற மாநிலங்களில் பதிவு செய்து, தமிழ்நாட்டிற்குள்ளாக அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு விதிகளை மீறி இயங்கி வருகின்றன. இவற்றுள் பெரும்பான்மையானவை புதுச்சேரி, நாகலாந்து, அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டவை.

மேலும், கர்நாடகம், கேரளம், ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் பதிவு செய்து அந்த மாநிலங்களுக்குச் செல்லாமல் தமிழ்நாட்டிற்கு எந்த ஒரு வரியும் செலுத்தாமல் தமிழ்நாட்டிற்குள்ளாகவே இயங்கி வருகின்றன. இதுவும் ஒரு விதி மீறலாகும். இவ்வாறு விதிகளை மீறி இயங்கும் ஆம்னி பேருந்துகளால் அரசுக்கு, பேருந்து ஒன்றுக்கு ஒரு காலாண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.1,08,000 வீதம் ஆண்டொன்றிற்கு குறைந்தபட்சம் ரூ.4,32,000 நிதி இழப்பு ஏற்படுகிறது. காலஅவகாசம் கொடுத்தும் 905 இதர மாநிலப் பதிவெண் கொண்டு இயங்கும் ஆம்னி பேருந்துகளில் 112 பேருந்துகள் மட்டுமே தங்களது பிற மாநிலப் பதிவெண்ணை ரத்து செய்துவிட்டு தமிழ் நாட்டில் மறுபதிவு செய்து முறையான அனுமதிச் சீட்டு பெற்று இயக்க ஆரம்பித்துள்ளனர்.

793 ஆம்னிப் பேருந்துகள் போக்குவரத்து ஆணையரகத்தின் மூலம் விடுக்கப்பட்ட பலகட்ட எச்சரிக்கைகளையும் மீறி, தங்களது முறைகேடான மற்றும் சட்டத்திற்குப் புறம்பான இயக்கத்தை நிறுத்தவில்லை. இத்தகையவர்களால் அரசிற்கு ஆண்டொன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.34.56 கோடி நிதி இழப்பு ஏற்படுகிறது. மாநிலம் முழுவதும் கடந்த 18ம் தேதி முதல் தீவிர வாகன தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மாநிலம் முழுவதிலும் 62 ஆம்னிப் பேருந்துகள் விதிமீறல்களுக்காக முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கூறினார்.

The post விதிகளை மீறி இயக்கப்பட்ட பிற மாநில பதிவெண் கொண்ட பஸ்கள் மட்டுமே முடக்கம்: அமைச்சர் சிவசங்கர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Sivashankar ,CHENNAI ,Transport Minister ,Sivasankar ,Tamil Nadu ,India ,
× RELATED மகளிருக்கு கட்டணமில்லா...