×

சென்னையில் மழை காரணமாக 2-வது நாளாக விமான சேவைகள் பாதிப்பு: பயணிகள் அவதி

சென்னை: சென்னையில் மழை காரணமாக 2-வது நாளாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நேற்று காலை விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்றும் சென்னையில் நள்ளிரவில் சூறைக்காற்று, இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சென்னை அண்ணா சாலை, கீழ்ப்பாக்கம், நுங்கம்பாக்கம், நந்தனம், அண்ணாநகர், வடபழனி, கிண்டி, மீனம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

அதே போல சென்னை புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, திருவேற்காடு, ஆவடி, அம்பத்தூர், அனகாபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி வேலை முடித்து வீடு திரும்புவோர் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். வாகன ஓட்டிகள் சாலை ஓரங்களில் ஒதுங்கி நின்றுகொண்டிருக்கின்றனர். அண்ணா சாலை, ஜிஎஸ்டி சாலை உள்ளிட்ட சாலைகளில் சில இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் 2வது நாளாக இன்றும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

12 விமானங்கள் தரையிறங்குவதிலும் 14 விமானங்கள் புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டது. கோழிக்கோட்டில் இருந்து 70 பயணிகளுடன் சென்னை வந்துகொண்டிருந்த இண்டிகோ விமானம் நீண்ட நேரம் வானில் வட்டமடித்தது. டெல்லியில் இருந்து 158 பயணிகளுடன் சென்னை வந்த விமானமும் நீண்ட நேரம் வானிலேயே காத்திருந்தது. நீண்ட நேரத்துக்கு பிறகு கோழிக்கோடு விமானம் திருச்சிக்கும் டெல்லி விமானம் பெங்களூருவுக்கும் திருப்பிவிடப்பட்டன. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

The post சென்னையில் மழை காரணமாக 2-வது நாளாக விமான சேவைகள் பாதிப்பு: பயணிகள் அவதி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Passenger ,Avati ,
× RELATED மபி, உத்தரகாண்ட் மாநிலங்களை அதிரவைத்த...