×

புதுக்கோட்டையில் வடிகால் வாய்க்கால் தூய்மை செய்யும் பணி

 

புதுக்கோட்டை, ஜூன் 19: புதுக்கோட்டை நகராட்சி, கம்பன் நகரில் உள்ள வடிகால் வாய்க்கால்களில் மழைநீர் தேங்காத வகையில், தூய்மை செய்யும் பணியினை, கலெக்டர் மெர்சி ரம்யா, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலன் கருதி எண்ணற்ற நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் நகர்ப் பகுதிகளில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்காத வகையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் பல்வேறு தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி இன்றைய தினம் கம்பன் நகரில் உள்ள வடிகால் வாய்க்கால்களில் மழைநீர் தேங்காத வகையில், தூய்மை செய்யும் பணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் மழைக்காலங்களில் இதுபோன்ற வடிகால் வாய்க்கால்களில் மழைநீர் தேங்குவதால் பொதுமக்களுக்கு சுகாதார இடர்பாடுகள் ஏற்படுதல், சாலைகளில் மழைநீர் தேங்குதல், நோய்களைப் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாதல் உள்ளிட்ட பல்வேறு சுகாதாரமற்ற செயல்பாடுகள் நடைபெறுகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு மழைநீர் தேங்காத வகையில் மழைநீர் வடிந்தோடும் வடிகால் வாய்க்கால்கள் அவ்வப்போது தூய்மை செய்யப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் மழைநீர் வடிகால் வாய்க் கால்களை தூய்மையாக பராமரிப்பதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிகழ்வுகளில், புதுக்கோட்டை நகராட்சி பொறியாளர் முகமது இப்ராஹிம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

The post புதுக்கோட்டையில் வடிகால் வாய்க்கால் தூய்மை செய்யும் பணி appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Mercy Ramya ,Pudukottai Municipality ,Kampan Nagar ,Tamil Nadu ,Chief Minister ,
× RELATED தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை...