×

மாவட்டம் முழுவதும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

திருவள்ளூர்: நீண்ட காலத்திற்கு வாழ்ந்து வந்த இப்ராஹிம் நபி என்பவருக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் பல ஆண்டுகளாக அல்லாவிடம் பிரார்த்தனை செய்து அதன் பலனாக பிறந்த ஆண் குழந்தைக்கு இஸ்மாயில் என பெயரிடப்பட்டது. அந்தக் குழந்தை இளம் பருவத்தில் வளர்ந்த பொழுது, அல்லாஹ் இப்ராஹிம் நபியின் கனவில் வந்து தங்களது குழந்தையை அறுத்து பலியிட வேண்டுமென கட்டளையிட்டுள்ளார்.

நீண்ட காலம் கழித்து பிறந்த குழந்தையாக இருந்தாலும் மிகவும் பாசமான பிள்ளையாக இருந்தாலும் இறைவனின் கட்டளையை நிறைவேற்ற வேண்டுமென தியாக மனப்பான்மையுடன் தனது மகனை வெட்டி பலியிட முயன்ற போது, அல்லாஹ்வின் இறைத்தூதர் இறங்கி வந்து மகனை பலியிட வேண்டாம். அதற்கு பதிலாக ஒட்டகம் மாடு, ஆடு போன்ற பிராணிகளை அறுத்து பலியிடுங்கள் என கூறினர். இந்த இப்ராஹீம் நபியின் தியாகத்தை போற்றும் விதமாக பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இந்த பண்டிகையின் போது குர்பானி என்ற சடங்கு மூலம் ஆடு அல்லது மாடு ஆகியவற்றை அறுத்து மூன்று பங்காக பிரித்து ஒரு பங்கு தனது அண்டை வீட்டார்களுக்கும் மற்றொரு பங்கு ஏழை, எளிய மக்களுக்கும் மற்றொரு பங்கு சொந்தம் பந்தங்களுக்கு என முறையாக பிரித்து கொடுக்க வேண்டும் என்பது இறைவனின் கட்டளையாகும். இதன் மூலம் ஏழைகள் முதல் அண்டை வீட்டார்கள் வரை அனைவரும் ஒரே சமம் எனவும் இது போன்ற பண்டிகை தினங்களில் அனைவரும் பசி பட்டினி இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் எனவும் இந்த பண்டிகை மூலம் நமக்கு உணர்த்துகிறது.

அதன்படி திருவள்ளூர் ஈத்கா மைதானத்தில் ஜாமியா மஸ்ஜித் தலைமை இமாம் உமர் பாருக் அன்வாரி தலைமையில் சிறப்பு தொழுகை மற்றும் பிரசங்கம் நடைபெற்றது. இந்த தொழுகையில் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு இறைவனை வணங்கினர். பிறகு பிரசங்கத்தைக் கேட்டு மகிழ்ந்தனர். இதனைத் தொடர்ந்து தொழுகைக்கு வந்தவர்களுக்கு வாழ்த்துக் கூறி ஒருவரை ஒருவர் கட்டித் தழுவினர். பின்னர் ஏழைகளுக்கு தானம் செய்தவாறு தங்களது வீடுகளுக்கு மகிழ்ச்சியுடன் சென்றனர்.

இந்த பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகையை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. திருத்தணி: திருத்தணியில் உள்ள மசூதிகளில் இன்று காலை நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான முஸ்லீம்கள் பங்கேற்றனர். இஸ்லாம் நகரில் உள்ள ஜம்யா மசூதியில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் சிறுவர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்று சிறப்பு தொழுகைகளை நடத்தி அமைதி நிலவ துவா செய்தனர். பக்ரீத் திருநாள் தொடர்பான உரை நிகழ்த்தி, வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி பக்ரீத் வாழ்த்துக்கள் பகிர்ந்து கொண்டனர். தொழுகை நடந்த பிறகு ஆடு, மாடு உள்ளிட்டவைகளை பலி கொடுத்து இறைச்சியை முஸ்லீம்கள் அவர்களது குடும்பத்தினர், உறவினர் மற்றும் ஏழைகளுக்கு வழங்கினர். இஸ்லாம் நகர், பொதட்டூர்பேட்டை, பள்ளிப்பட்டு, சி.என்.கண்டிகை, கொளத்தூர், அத்திமாஞ்சேரிபேட்டை, கோபாலபுரம், ஆர்.கே.பேட்டை உட்பட பல்வேறு பகுதிகளில் முஸ்லீம்கள் பக்ரீத் திருநாள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொண்டனர்.

The post மாவட்டம் முழுவதும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை appeared first on Dinakaran.

Tags : Muslims ,Bakrit ,Tiruvallur ,Prophet ,Ibrahim ,Allah ,Ismail ,
× RELATED புதுக்கோட்டையில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை