×

குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று அசத்தல் தூய்மை பணியாளரின் மகள் நகராட்சி ஆணையராகிறார்: தந்தை உயிருடன் இல்லையே என உருக்கம்

மதுராந்தகம்: குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்றதையடுத்து தூய்மை பணியாளரின் மகள் நகராட்சி ஆணையராகிறார். இதனை பார்த்து மகிழ தனது தந்தை உயிருடன் இல்லையே என அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகரைச் சேர்ந்தவர் நிர்மல் குமார் (35). இவரது மனைவி துர்கா (30). திருமணமாகி சில வருடங்களே ஆன இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். துர்காவிற்கு சொந்த ஊர் மன்னார்குடி. இவரது தந்தை சேகர் (52). தாய் செல்வி (50).

சேகர் மன்னார்குடி நகராட்சியில் சுகாதார பணியாளராக பணிபுரிந்து வந்தார். அவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பணியில் இருக்கும்போது கால்வாய் ஒன்றில் தவறி விழுந்து தலையில் பலத்த அடிபட்டு உயிரிழந்தார். இதில் துர்கா கடந்த 2019ம் ஆண்டு முதல் டிஎன்பிசி தேர்வு எழுதி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் குரூப் 2ஏ தேர்வு எழுதியுள்ளார். அதில் அவர் வெற்றி பெற்றதாக அரசு கடிதம் அவருக்கு வந்துள்ளது.

இதன் மூலம் அவர் தமிழக அரசின் நகராட்சி கமிஷனர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகிக்க முடியும். மன்னார்குடியில் சுகாதார பணியாளராக பணிபுரிந்து வந்த சாதாரண ஒரு ஊழியரின் மகள் தற்போது தமிழக அரசின் உயர் பதவிகளை வகிக்கக்கூடிய அளவிற்கு தேர்ச்சி பெற்றுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து துர்கா கூறுகையில், என்னை கஷ்டப்பட்டு வேலை செய்து படிக்க வைத்த என் தந்தையிடம் நான் வெற்றி பெற தகவலை தெரிவிக்க முடியாமல் போய்விட்டது.

அவர் என்னை மிகவும் நேசித்தார். தற்போது அவர் உயிருடன் இருந்திருந்தால் மிகவும் சந்தோஷப்பட்டு இருப்பார். அதுதான் தற்போது எனக்கு மிகப்பெரிய வேதனையாக உள்ளது. நான் பணியில் சேர்ந்ததும் அனைத்து தரப்பு மக்களுக்காகவும் பாடுபடுவேன் என்றார். இவரது கணவர் நிர்மல் குமார் தற்போது மதுராந்தகம் தாலுகா அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக பணிபுரிவதும், நிர்மல்குமாரின் தந்தை கிருஷ்ணன் (63) மதுராந்தகம் நகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று அசத்தல் தூய்மை பணியாளரின் மகள் நகராட்சி ஆணையராகிறார்: தந்தை உயிருடன் இல்லையே என உருக்கம் appeared first on Dinakaran.

Tags : Meltdown ,Madurandakam ,Nirmal Kumar ,Madurandkam City, Chengalpattu District ,Dinakaran ,
× RELATED கலைஞர் 101வது பிறந்தநாளையொட்டி அரசு...