×

நான் முதல்வன் திட்டத்தில் லண்டனில் பயிற்சி முடிந்து 25 மாணவர்கள் திரும்பினர்: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து

சென்னை: தமிழ்நாடு முதல்வரின் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் லண்டனில் சிறப்பு பயிற்சி முடிந்து நேற்று அதிகாலை விமானம் மூலமாக சென்னைக்கு திரும்பிய மாணவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர்கள், முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் கனவு திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டம் கடந்த 1.3.2022 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்த மாபெரும் திறன் மேம்பாட்டிற்கான திட்டம் 2 ஆண்டுகளை கடந்து வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெற்று, வேலைவாய்ப்புகளையும் பெற்று வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, ‘நான் முதல்வன்’ மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் இணைந்து நடத்திய S.C.O.U.T திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டின் பல்வேறு கல்லூரிகளில் இருந்து மொத்தம் 1267 விண்ணப்பங்கள் வந்தநிலையில், அவற்றில் இருந்து 100 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் முதலில் 24 மணி நேர ஆன்லைன் பயிற்சியில் பங்கேற்று, அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 11 மாணவர்களும், 14 மாணவியர்களும் கடந்த 9ம் தேதி முதல் 16ம் தேதி வரை இங்கிலாந்தின் துர்ஹாம் பல்கலைக்கழகத்தில் தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய முன்னணி துறைகளில் ஒரு வார காலம் நேரடியாக பயிற்சி பெற்றனர்.

இந்த திட்டம் தமிழ்நாட்டை சேர்ந்த திறமையான கல்லூரி மாணவர்களுக்கு சர்வதேச அனுபவம் மற்றும் மேம்பட்ட திறன்களை பெறுவதற்கான அரிய வாய்ப்புகளை அளித்துள்ளது. இத்திட்டத்திற்காக மாணவர்களை தேர்வு செய்து அவர்களின் பயணம், தங்குமிடம் மற்றும் பயிற்சி முதலிய செலவுகளை தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து ஏற்றுக் கொண்டுள்ளன. இந்நிலையில், லண்டனில் உள்ள துர்ஹாம் பல்கலைக்கழகத்தில் ஒரு வார சிறப்பு திறன் மேம்பாட்டு பயிற்சியை தமிழகத்தை சேர்ந்த 25 மாணவ, மாணவிகளும் வெற்றிகரமாக முடித்தனர்.

பின்னர் நேற்று முன்தினம் இரவு லண்டனில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மூலமாக நேற்று அதிகாலை சென்னை விமான நிலையத்தில் 25 மாணவ, மாணவிகளும் வந்து இறங்கினர். விமான நிலையத்தில் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, பயிற்சி பெற்று தமிழ்நாடு திரும்பிய 25 மாணவர்களும், நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின், இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்பு திட்டச் செயலாக்க துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் நேரில் சந்தித்தனர். அப்போது மாணவர்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு முதல்வரிடம் வாழ்த்துகளை பெற்றனர்.

இவர்களில் 20 மாணவர்கள் அரசு கல்லூரிகளில் பயின்று வருகின்றனர். இவர்களில் சுஜாதா குப்புசாமி மற்றும் கிருத்திகா துளசிமணி ஆகிய 2 மாணவிகள் ‘புதுமைப் பெண்’ திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது, முதல்வரின் செயலாளர் முருகானந்தம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் இன்னசென்ட் திவ்யா, பிரிட்டிஷ் கவுன்சிலின் தென்னிந்தியாவிற்கான இயக்குநர் ஜனக புஷ்பநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

* புதிய அனுபவம்
லண்டனில் சிறப்பு பயிற்சி பெற்ற மாணவர்கள் கூறுகையில், ‘‘தமிழக முதல்வரின் நான் முதல்வன் திட்டத்தில் இணைந்து பயிற்சி பெற்றதில், வெளிநாட்டில் சிறப்பு பயிற்சி பெறுவதற்கு ஏதுவாக இருந்தது. லண்டனுக்கு முதன்முறையாக விமானத்தில் சென்றது புதுவித அனுபவமாக இருந்தது. அங்கு எங்களுக்கு வெளிநாட்டு பல்கலைக்கழக பேராசிரியர்களின் பயிற்சி மிக பயனுள்ளதாக அமைந்தது. இப்புதிய அனுபவத்தை ஏற்படுத்தி கொடுத்த தமிழக அரசு, முதல்வர், விளையாட்டு துறை அமைச்சர் ஆகியோருக்கு எங்களின் மனமார்ந்த நன்றி’’ என்று மகிழ்ச்சி தெரிவித்தனர்.

The post நான் முதல்வன் திட்டத்தில் லண்டனில் பயிற்சி முடிந்து 25 மாணவர்கள் திரும்பினர்: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : London ,Chief Minister ,M.K.Stalin. ,CHENNAI ,Tamil Nadu ,M.K.Stalin ,Tamil Nadu… ,
× RELATED அறிவை வளர்த்தோம்… தன்னம்பிக்கை...