×

வாகனங்களில் மீது தாறுமாறாக மோதியதில் 10 பேர் படுகாயம் மதுபோதையில் கார் ஓட்டி விபத்து காஞ்சி தொழிலதிபருக்கு தர்மஅடி: குடியை மறக்க கோயிலுக்கு கயிறு கட்ட வந்தவர் கடைசியாக ஒரு ரவுண்ட் போட்டதால் வினை

பண்ருட்டி: மதுபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய காஞ்சி தொழிலபதிருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் ஏழுமலை (35), அப்பள கம்பெனி நடத்தி வருகிறார். இவர் குடிப்பழக்கம் உள்ளவர். குடிப்பழக்கத்தை மறக்க நேற்று முன்தினம் பண்ருட்டி அருகே உள்ள கொஞ்சிக்குப்பம் ஐய்யனார் கோயிலுக்கு தனது தோழி ஒருவருடன் காரில் வந்தார். அவருடன் எலக்ட்ரீசியன் ரமேஷ், ஆட்டோ டிரைவர் பாண்டியன் மற்றும் ஒருவரும் வந்துள்ளனர். இவர்கள் கோயிலுக்கு கயிறு கட்ட செல்லும் முன் ஏழுமலை தனது நண்பர்களிடம், ‘இனி குடிக்க முடியாது. கடைசியாக ஒருமுறை குடித்து கொள்கிறேன்’ எனக் கூறியபடி அங்குள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்துள்ளார்.

பின்னர் ஏழுமலை அங்குள்ள குளத்தில் குளித்து விட்டு, பின்னர் கோயிலுக்கு சென்று பூசாரி மூலமாக கயிறு கட்டிக்கொண்டு, சீட்டு எழுதி சுவாமி சிலை முன் வைத்து விட்டு மீண்டும் காஞ்சிபுரம் செல்ல காரில் புறப்பட்டனர். காரை ஏழுமலை ஓட்டி சென்றார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சித்திரை சாவடி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். போலீசாரை பார்த்தவுடன் பயந்து போன ஏழுமலை காரை திருப்பிக்கொண்டு சென்றார். தாறுமாறாக ஓடிய கார் எதிரே வந்த வாகனங்களை உரசி தள்ளியபடி பறந்தது. இதில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதனால் அந்த காரை பின் தொடர்ந்து வாகனங்களில் விரட்டி வந்த பொதுமக்கள் பண்ருட்டி பஸ் நிலையம் எதிரில் தடுத்து நிறுத்தி காரை ஓட்டி வந்த ஏழுமலைக்கு தர்ம அடி கொடுத்து பண்ருட்டி போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து பண்ருட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வாகனங்களில் மீது தாறுமாறாக மோதியதில் 10 பேர் படுகாயம் மதுபோதையில் கார் ஓட்டி விபத்து காஞ்சி தொழிலதிபருக்கு தர்மஅடி: குடியை மறக்க கோயிலுக்கு கயிறு கட்ட வந்தவர் கடைசியாக ஒரு ரவுண்ட் போட்டதால் வினை appeared first on Dinakaran.

Tags : Panruti ,Yemumalai ,Kanchipuram ,
× RELATED பண்ருட்டி தர்காவில் 2 குழந்தைகளை விட்டுச்சென்ற தாய்..!!