×

கடைசி பந்து வரை போராட்டம்; தெ.ஆ.க்கு தண்ணீ காட்டிய நேபாளம்: ஒரு ரன்னில் ‘த்ரில்’ வெற்றி

கிங்ஸ்டவுன்: ஐசிசி ஆண்கள் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 31வது லீக் ஆட்டத்தில் நேற்று தென் ஆப்ரிக்கா-நேபாளம் அணிகள் மோதின. டி பிரிவில் உள்ள இந்த அணிகள் மோதிய ஆட்டம் செயின்ட் வின்சன்ட் தீவில் உள்ள கிங்ஸ்டவுனில் நடந்தது. இந்த பிரிவில் தான் விளையாடிய 3 ஆட்டங்களிலும் வென்ற தெ.ஆ ஏற்கனவே சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி விட்டது. நேபாளம் முதல் வெற்றிக்காக 3வது ஆட்டத்தில் களமிறங்கியது. டாஸ் வென்ற நேபாளமும் வழக்கம் போல் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதனால் களமிறங்கிய தெ.ஆவின் ஆரம்பம் நன்றாகதான் இருந்தது. அதன் பிறகு நேபாளத்தின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தெ.ஆ வீரர்கள் ரன் எடுக்க திணறினார். ஆனாலும் 20ஓவர் வரை தாக்குப்பிடித்த தெ.ஆ 7விக்கெட் இழப்புக்கு 115ரன் மட்டுமே எடுத்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக ஹெண்ட்ரிக்ஸ் 43(49பந்து, 5பவுண்டரி, 1சிக்சர்) ரன் எடுத்தார். டிரிஸ்டன் 27(18பந்து, 2பவுண்டரி,1சிக்சர்) அடித்து கடைசி வரை களத்தில் இருந்தார். நேபாள வீரர்கள் குஷால் 4, திபேந்திரா 3 விக்கெட் அள்ளினர். அதனையடுத்து 116ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நேபாளம் களமிறங்கியது. அந்த அணிக்கும் ஆரம்பம் சிறப்பாகவே அமைந்தது. அவ்வப்போது விக்கெட்கள் வீழ்ந்தாலும் ஸ்கோர் உயர்ந்த வண்ணம் இருந்தது. கடைசி ஓவரில் 8 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் முதல் 5 பந்துளில் 6ரன் சேர்த்தார் குல்ஷன். கடைசி பந்தில் 2ரன் எடுத்தால் வெற்றி, ஒரு ரன் எடுத்தால் சூப்பர் ஓவர் என்ற நிலைமை. ஆனால் கடைசி பந்தில் குல்ஷனை ரன் அவுட்டாக்கினார் கிளாஸன். அதனால் நேபாளம் 20ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 114ரன் மட்டுமே எடுத்தது.

அதனால் கடைசி வரை போராடிய தெ.ஆ ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் ‘த்ரில்’ வெற்றியை ருசித்தது. நேபாள வீரர்கள் ஷேக் 42(49பந்து, 4பவுண்டரி, 1சிக்சர்), அனில் 27(24பந்து, 3பவுண்டரி, 1சிக்சர்) எடுத்தனர். தெ.ஆ தரப்பில் ஆட்ட நாயகன் ஷம்சி 4விக்கெட் சுருட்டினார். இந்த வெற்றியின் மூலம் தெ.ஆ லீக் சுற்றில் தான் விளையாடிய 4 ஆட்டங்களிலும் வென்று டி பிரிவில் முதல் இடம் பிடித்தது. இலங்கையை தொடர்ந்து நேபாளமும் சூப்பர்-8வாய்ப்ைப இழந்தது.

The post கடைசி பந்து வரை போராட்டம்; தெ.ஆ.க்கு தண்ணீ காட்டிய நேபாளம்: ஒரு ரன்னில் ‘த்ரில்’ வெற்றி appeared first on Dinakaran.

Tags : Nepal ,Kingstown ,South Africa ,ICC ,Men's T20 World Cup cricket tournament ,Kingstown, St. Vincent Island ,TEA ,Dinakaran ,
× RELATED தென்னாப்பிரிக்கா அணி போராடி வெற்றி..!!