×

ரூ.100 கோடி சொத்து அபகரிப்பு அதிமுக மாஜி அமைச்சர் தலைமறைவு: வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

கரூர்: கரூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ரூ.100 கோடி சொத்தை அபகரித்ததாக எழுந்த புகார் மீதான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ். தொழிலதிபரான இவர் கரூர் நகர காவல் நிலையம் மற்றும் எஸ்பி அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: அதிமுகவை சேர்ந்த நான் நாமக்கல் மற்றும் பரமத்தி வேலூரில் எலக்ட்ரிக்கல்ஸ் கடை நடத்தி வருகிறேன்.

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும், எனக்கும் இடையே பல ஆண்டுகளாக பணம் கொடுக்கல், வாங்கல் இருந்தது. இந்த நிலையில் தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் உள்ள எனது ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அவர் சொல்லும் நான்கு பேருக்கு எழுதி தரும்படி கேட்டு மிரட்டினார். இதனால் கடந்த பிப்ரவரி மாதம் எனது மகள் ஷோபனா பெயருக்கு எனது சொத்துக்களை தான செட்டில்மெண்ட் எழுதி வைத்தேன்.

ஆனால், விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எனது மகள் ஷோபனா மற்றும் என் மனைவியை மிரட்டி, போலி ஆவணங்களை வழங்கி மோசடியாக சொத்துக்களை பதிவு செய்துள்ளனர். இது குறித்து சார்பதிவாளர் அலுவலகத்தில பத்திரப்பதிவை ரத்து செய்ய மனு அளித்தேன். அச்சத்தின் காரணமாக இதுவரை போலீசில் புகார் அளிக்காத நிலையில், எனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனக்கும், எனது குடும்பத்திற்கும் பாதுகாப்பு அளித்து, மோசடியாக அபரிக்கப்பட்ட ரூ.100 கோடி சொத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். இது குறித்து கரூர் மாவட்ட மத்தியக் குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் கரூரில் உள்ள மேலக்கரூர் சார்பதிவாளர் (பொ) முகமது அப்துல் காதர், கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி கரூர் டவுன் காவல் நிலையத்தில் 7 பேர்கள் மீது கடந்த 9ம்தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த விவகாரத்தில் தான் முன் ஜாமீன் கேட்டு விஜயபாஸ்கர் கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம் வருகிற 19ம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டது.

இந்தநிலையில், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று உத்தரவிட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் கரூர் விஜயபாஸ்கர் மீதான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கிடைக்காத நிலையில் அவர் தலைமறைவாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இது கரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post ரூ.100 கோடி சொத்து அபகரிப்பு அதிமுக மாஜி அமைச்சர் தலைமறைவு: வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,CBCID ,Karur ,DGP ,Shankar Jiwal ,minister ,M.R. Vijayabaskar ,Prakash ,Wangal Guppichipalayam ,Karur district ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம்...