×

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் படுதோல்வி எதிரொலி விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; அதிமுக புறக்கணிப்பு: எடப்பாடி அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்ததன் எதிரொலியாக, நடைபெற உள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்கும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிற்பகல் 3 மணிக்கு வந்தார். இதையடுத்து விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்தில், மூத்த நிர்வாகிகள் திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், தமிழ்மகன் உசேன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டம் சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பிறகு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறி இருப்பதாவது: பொதுவாக தேர்தல் என்ற உடனேயே, முதலாவதாக களத்தில் இறங்குவது அதிமுக தான்.

தேர்தலை கண்டு அஞ்சுகின்ற, பயப்படுகின்ற, அச்சப்படுகின்ற இயக்கம் அதிமுக அல்ல என்பதை அனைவரும் நன்கு அறிவர். கடந்த 18.8.2009 அன்று நடைபெற்ற இளையான்குடி, கம்பம், தொண்டாமுத்தூர், பர்கூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலையும், 27.2.2009 அன்று நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல்களையும் ஜெயலலிதா புறக்கணித்தார்.  அந்த வகையில், 10.7.2024 அன்று நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

* 10வது தொடர் தோல்வியை தவிர்க்கவே எடப்பாடி நாடகமாடுவதாக குற்றச்சாட்டு
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழகத்தில் நடைபெற்ற நாடாளுமன்றம், சட்டமன்றம், இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல்கள் என 10 தேர்தல்களிலும் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. குறிப்பாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் தோல்வியையே சந்தித்துள்ளது. அதன்படி, 2017ம் ஆண்டு நடைபெற்ற ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தல், 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தல், தேர்தலுடன் நடைபெற்ற 22 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலிலும் அதிமுக தோல்வி அடைந்தது. 2020ம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் தோல்வி.

2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தல், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2022ம் ஆண்டு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2023ம் ஆண்டு நடைபெற்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. இறுதியாக 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்து வரலாற்று சாதனை படைத்துள்ளது. 11வது தோல்வியை சந்திக்காமல் இருக்கவே விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு என்ற நாடகத்தை எடப்பாடி அரங்கேற்றியுள்ளார்.

* 2026 பேரவை தேர்தலையும் அதிமுக புறக்கணிக்குமா? ஜெயக்குமார் மழுப்பல் பதில்
எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: `2026ம் ஆண்டு நடைபெறும் தேர்தலிலும் திமுக போட்டியிடும். அப்படியென்றால் அந்த தேர்தலையும் புறக்கணிப்பீர்களா’ என்று கேட்கிறீர்கள்.

தற்போது விக்கிரவாண்டி தேர்தலை மட்டும் புறக்கணிக்கிறோம். `ஒரு எதிர்க்கட்சியாக இருந்துகொண்டு தேர்தலை புறக்கணித்தால் மக்கள் உங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை இழக்க நேரிடுமே’ என்று கேட்கிறீர்கள். ஒரு தொகுதியை புறக்கணிப்பதால் பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்பட போவதில்லை. தொடர்ந்து கேள்வியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் ஜெயக்குமார் நழுவிச் சென்று விட்டார்.

The post தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் படுதோல்வி எதிரொலி விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; அதிமுக புறக்கணிப்பு: எடப்பாடி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Vikravandi ,Tamil Nadu ,AIADMK ,Edappadi ,Chennai ,Edappadi Palaniswami ,39th ,General Secretary ,Rayapetta, Chennai ,Dinakaran ,
× RELATED விக்கிரவாண்டி சட்டமன்ற...