×

போக்குவரத்து நெரிசல் குறித்து ஆலோசனை கூட்டம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முன்பு மேம்பாலம் அமைக்கப்படும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

கூடுவாஞ்சேரி, ஜூன் 15: கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நடந்த, ஆலோசனை கூட்டத்தில் அப்பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார். சென்னை வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் ஜிஎஸ்டி சாலை ஓரத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து தென் மாவட்டங்களுக்கு தினம் தோறும் ஆயிரக்கணக்கான அரசு விரைவு பேருந்துகள், அரசு பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், தினந்தோறும் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை சரி செய்வதற்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள கூட்ட அரங்கில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது குறித்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

அப்போது, அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘சென்னை புறநகர் பகுதிகளான பல்லாவரத்தில் இருந்து செங்கல்பட்டு வரை போக்குவரத்து நெரிசல் தினம்தோறும் ஏற்பட்டு வருகிறது. இதனை சீர் செய்வதற்காக வருவாய்த்துறை நெடுஞ்சாலை துறை போக்குவரத்து துறை காவல் துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் அழைத்து அவரிடம் உரிய விசாரணை நடத்தி தாம்பரம் ஆர்டிஓ தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பல்லாவரத்தில் இருந்து செங்கல்பட்டு வரை உள்ள ஜிஎஸ்டி சாலையின் இரண்டு பக்கத்திலும் போக்குவரத்துக்கு இடையூறாக யார் ஆக்கிரமிப்பு செய்திருந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் அதனை அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன்.

மேலும், போக்குவரத்து நெரிசலை சீர் செய்வதற்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முன்பு மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. அதற்கான அறிவிப்பை தமிழக முதல்வர் சட்டசபையில் விரைவில் அறிவிப்பார். அந்த அறிவிப்பு வெளிவந்தவுடன் உடனடியாக மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.அப்போது அவருடன் செங்கல்பட்டு தொகுதி எம்எல்ஏ வரலட்சுமிமதுசூதனன், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், தாம்பரம் மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் காமராஜ் உட்பட ஏராளமானோர் உடனிருந்தனர்.

The post போக்குவரத்து நெரிசல் குறித்து ஆலோசனை கூட்டம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முன்பு மேம்பாலம் அமைக்கப்படும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Klambakkam ,Minister ,Thamo Anparasan ,Guduvanchery ,Kalamakkam bus ,GST ,Vandalur, Chennai ,Klambakkam bus ,Minister Thamo Anparasan ,Dinakaran ,
× RELATED ஊரப்பாக்கத்தில் ரூ.5 கோடி...