×

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் பாரபட்சம் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் ‘இந்தியா’ கூட்டணி ஆர்ப்பாட்டம்

புதுடெல்லி: தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் பாரபட்சம் காட்டப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டி எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் நேற்று வெளிநடப்பு செய்தனர். மேலும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்காததை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களவையில் நடப்பு நிதியாண்டிற்கான முழு பட்ஜெட்டை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் தாக்கல் செய்தார்.

இதில், பாஜ கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் ஆளும் பீகார் மாநிலத்திற்கு ரூ.60 ஆயிரம் கோடியும், தெலுங்கு தேசம் ஆளும் ஆந்திராவுக்கு ரூ.15,000 கோடியும் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்படும் இமாச்சல், உத்தரகாண்ட், அசாம் மாநிலங்களுக்கு வெள்ளத்தடுப்புக்கான நிதி உதவி வழங்கப்படும் என கூறிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பீகாருக்கு மட்டும் வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக ரூ.11,500 கோடி ஒதுக்கப்படும் என்றார். வெள்ள நிவாரண நிதியை பலமுறை கேட்ட தமிழ்நாட்டிற்கு எந்த நிதி உதவியும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை.

இதனால், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் ஒட்டுமொத்தமாக பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகவும், மாநிலங்கள் இடையே பாரபட்சம் காட்டப்பட்டிருப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவர்கள் பட்ஜெட் மீது அதிருப்தி தெரிவித்தனர். இதுதொடர்பாக தமிழ்நாடு எம்பிக்கள் எதிர்க்கட்சி தலைவரான காங்கிரசின் ராகுலை சந்தித்து முறையிட்டனர். இந்நிலையில், நேற்று காலை மக்களவை கூடும் முன்பாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வீட்டில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், ராகுல் காந்தி, திமுக எம்பி டி.ஆர்.பாலு உள்ளிட்ட கூட்டணி கட்சி எம்பிக்கள் பங்கேற்றனர். கூட்டத்தைத் தொடர்ந்து பேட்டி அளித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், ‘‘இந்த ஆண்டு பட்ஜெட்டின் கருத்தாக்கம் முற்றிலும் சிதைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு பல மாநிலங்களை பாரபட்சமாக நடத்தி உள்ளது. இதை கண்டித்து போராட்டம் நடத்த இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளது’’ என்றார்.

அதன்படி, நாடாளுமன்றத்திற்கு சென்ற இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் அங்கு வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திமுக எம்பிக்கள் கனிமொழி, திருச்சி சிவா, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, ‘எங்களுக்கு தேவை இந்தியாவுக்கான பட்ஜெட், பாஜ கூட்டணி பட்ஜெட் அல்ல’ என பதாகைகளை ஏந்தி பட்ஜெட்டுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “இந்த பட்ஜெட் பாஜகவின் கூட்டாளிகளை திருப்திப்படுத்துவதற்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் யாருக்கும் எதுவும் கொடுக்கவில்லை. இது பாரபட்சமான பட்ஜெட். இந்த பட்ஜெட்டை நாங்கள் தொடர்ந்து எதிர்ப்போம்” எனக் குறிப்பிட்டார். போராட்டத்தின் புகைப்படத்தை தனது வாட்ஸ்அப் சேனலில் பகிர்ந்த ராகுல் காந்தி, ‘‘பாஜவின் ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளும் பட்ஜெட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தி உள்ளோம். இந்த பட்ஜெட் இந்தியாவின் கூட்டாட்சி புனிதத்தின் மீதான தாக்குதல். அதிகார பேராசையால், நாட்டின் பிற மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டு பாகுபாடு காட்டப்பட்டுள்ளது. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் சம நீதியை வழங்க இந்திய கூட்டணி தொடர்ந்து குரல் கொடுக்கும்’’ என கூறி உள்ளார்.

அகிலேஷ் யாதவ் கூறுகையில், ‘‘எனது உபி மாநிலமும் பாரபட்சமாக நடத்தப்படுகிறது. எங்களின் வேலை வாய்ப்புகளை பறித்துவிட்டு, தற்போது தொழிற்பயிற்சி பற்றி பேசுகின்றனர்’’ என்றார். இதைத் தொடர்ந்து மக்களவை கூடியதும், பட்ஜெட் ஒதுக்கீடு குறித்த பிரச்னையை எதிர்க்கட்சிகள் எழுப்ப முயன்றன. ஆனால் அனுமதி மறுத்த சபாநாயகர் ஓம்பிர்லா கேள்வி நேரத்தை தொடங்கினார். இதனால் தொடர்ந்து கோஷமிட்டபடி இருந்த எதிர்க்கட்சி எம்பிக்கள் பின்னர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதே போல மாநிலங்களவை கூடியதும், பட்ஜெட் ஒதுக்கீட்டில் மாநிலங்கள் இடையே பாரபட்சம் காட்டப்பட்டிருக்கும் விவகாரம் குறித்து விவாதம் நடந்த விதி 267ன் கீழ் அவை ஒத்திவைப்பு தீர்மானத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தாக்கல் செய்தார்.

இதனை அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஏற்கவில்லை. அப்போது பேசிய கார்கே, ‘‘பட்ஜெட்டில் ஆந்திரா, பீகார் ஆகிய இரு மாநிலங்களுக்கு மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற எந்த மாநிலத்திற்கும் நிதி அறிவிக்கப்படவில்லை. இத்தகைய பாரபட்சத்திற்கு இந்தியா கூட்டணி கடும் கண்டனம் தெரிவிக்கிறது’’ என்றார். இதுதொடர்பாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளிக்க அவைத்தலைவர் அனுமதி வழங்கினார். நிதி அமைச்சரின் பதிலை புறக்கணித்த எதிர்க்கட்சி எம்பிக்கள் கார்கே தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.

* அவைக்குள் நுழைவதில் சிரமம்: எம்பிக்கள் புகார்
நாடாளுமன்ற நுழைவாயிலின் படிக்கட்டுகளில் நின்றபடி இந்தியா கூட்டணி எம்பிக்கள் போராட்டம் நடத்தியதால், அவைக்குள் வருவதில் சிரமம் ஏற்பட்டதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ சபாநாயகரிடம் புகார் தெரிவித்தார். இதே போன்ற சிரமத்தை எதிர்கொண்டதாக பல எம்பிக்கள் தனக்கு கடிதம் எழுதியிருப்பதாக சபாநாயகர் பிர்லா தெரிவித்தார்.

* நிதிஷ், சந்திரபாபு சந்தோஷப்படாதீங்க!
மக்களவை பட்ஜெட் மீதான விவாதம் நேற்று தொடங்கியது. இதில், காங்கிரஸ் மூத்த தலைவர் செல்ஜா பேசுகையில், ‘‘யாருக்காக இந்த பட்ஜெட்? 2 மாநிலங்களுக்கு மட்டும்தானா? அல்லது நாடு முழுவதும் ஏதாவது செய்திருக்கிறீர்களா? 2 மாநிலங்கள் மற்றும் பாஜ ஆளும் மாநிலங்களைத் தவிர எதுவும் பரிசீலிக்கப்பட்டதாக தெரியவில்லை. ஆந்திரா, பீகார் ஆகிய 2 மாநிலத்திற்கு நான் எச்சரிக்கை விடுக்கிறேன். நிதிஷ், சந்திரபாபு நாயுடு இருவருக்கும் இன்று பாஜ நிறைய கொடுத்திருப்பதாக தோன்றலாம். இதற்காக நீங்கள் சந்தோஷப்பட்டுக் கொள்ளாதீர்கள். இந்த காலம் மாறும், அதற்கு அதிக நேரமாகாது. ஒன்றிய பட்ஜெட் வெறும் வார்த்தை ஜாலங்களின் தொகுப்பு’’ என்றார். சமாஜ்வாடி எம்பி பிரேந்திர சிங் பேசுகையில், ‘‘நிதி அமைச்சரின் பட்ஜெட் உரையில் உத்தரப்பிரதேசம் குறித்து ஒரு வார்த்தை கூட இடம் பெறவில்லை. பாஜவை பெரும்பான்மை பெற விடாமல் உபி தடுத்து விட்டது. அதற்காக நீங்கள் பழி வாங்குகிறீர்களா?’’ என்றார்.

* விளக்கமளித்த நிதி அமைச்சர் மடக்கிய திரிணாமுல் எம்பிக்கள்
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு குறித்து மாநிலங்களவையில் விளக்கம் அளித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டிலும், தற்போது தாக்கலாகி உள்ள முழு பட்ஜெட்டிலும் பல மாநிலங்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. அதற்காக அந்த மாநிலங்களில் அரசு திட்டங்கள் எதுவும் செயல்படவில்லை என அர்த்தமில்லை. ஒரு உதாரணம் சொல்கிறேன். 2 பட்ஜெட்டிலும் மகாராஷ்டிராவின் பெயர் இடம் பெறவில்லை. ஆனால் கடந்த மாதம் தஹானுவில் ரூ.76,000 கோடி மதிப்பில் வாதவன் துறைமுக திட்டத்திற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மகாராஷ்டிரா பெயரை நான் குறிப்பிடாததால் மகாராஷ்டிரா புறக்கணிக்கப்பட்டதா? ரூ.76,000 கோடி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதே.பட்ஜெட்டில் இரு மாநிலங்களுக்கு மட்டுமே நிதி தரப்பட்டிருப்பதாக, பாரபட்சம் காட்டப்பட்டிருப்பதான தோற்றத்தை மக்களிடம் உருவாக்க காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன. காங்கிரசுக்கு சவால் விடுக்கிறேன். அவர்கள் தாக்கல் செய்த ஒவ்வொரு பட்ஜெட்டிலும் நாட்டின் அனைத்து மாநிலத்தின் பெயர்களும் இடம் பெற்றிருக்கிறதா? எனவே இதெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாத குற்றச்சாட்டு. இவ்வாறு கூறினார்.

மேலும் நிர்மலா சீதாராமன் பேசுகையில், ‘‘மேற்கு வங்கத்தில் எதுவும் தரவில்லை என திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் கேள்வி கேட்கின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால் கடந்த 10 ஆண்டில் அந்த மாநிலத்தில் பல திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். ஆனால் அவர்கள் எதையும் அமல்படுத்தவில்லை’’ என்றார். அப்போது திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள், ‘‘ஒன்றிய பாஜ அரசு மேற்கு வங்கத்திற்கு ரூ.1 லட்சம் கோடி பாக்கி வைத்துள்ளது’’ என கோஷமிட்டனர். ஆனால் இதற்கு நிதி அமைச்சர் எந்த பதிலும் தரவில்லை.

The post தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் பாரபட்சம் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் ‘இந்தியா’ கூட்டணி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,India ,New Delhi ,Parliament ,India Alliance ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED நீதிபதிகள் நியமனம், ஓய்வூதியம்...