×

காற்றாலை மின்சாரம் உற்பத்தி அதிகரிப்பு: 4 ஆயிரம் மெகாவாட்டை தாண்டியது

நெல்லை: நெல்லை, குமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கடந்த 3 தினங்களாக காற்றின் வேகம் அதிகரித்து வரும் நிலையில், காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி தமிழகத்தில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த சீசனில் அதிகபட்சமாக 4,111 மெகாவாட் காற்றாலை மின்சாரம் நேற்று கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் 13 ஆயிரத்திற்கும் அதிகமான காற்றாலைகள் உள்ளன. தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான காற்றலைகள் நிறுவப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மே மாத தொடக்கத்திலேயே காற்றாலை சீசன் துவங்கிய நிலையில் நாள் ஒன்றிற்கு 1000 மெகாவாட்டிற்கும் குறைவாகவே மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. தென்மாவட்டங்களில் ஒருவாரமாக மழை பெய்ததால் காற்றாலை மின்உற்பத்தி அடியோடு சரிந்து, 100 மெகாவாட்டுக்கும் குறைவாகவே உற்பத்தி செய்யப்பட்டது.

இந்நிலையில் தற்போது தென் மேற்கு பருவகாற்று பலமாக வீசி வருவதால், கடந்த 3 தினங்களாக காற்றாலை மின் உற்பத்தி கணிசமாக உயர்ந்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி தமிழகத்தின் ஒட்டு மொத்த காற்றாலை மின் உற்பத்தி 4,111 மெகாவாட்டை எட்டியுள்ளது. இந்த சீசனில் அதிக பட்ச காற்றாலை மின் உற்பத்தி இதுவாகும். காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பின் காரணமாக பல்வேறு இடங்களில் மின் தட்டுப்பாடு தவிர்க்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கூடங்குளம் இரண்டாவது அணு உலையில் வருடாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அதிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்க கூடிய 562 மெகாவாட் தடை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அதிகரிக்கும் காற்றாலை மின் உற்பத்தி ஓரளவிற்கு கை கொடுத்து வருவதாக மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன், ஜூலை மாதங்களில் காற்றாலை மின் உற்பத்தி 5 ஆயிரம் மெகாவாட்டை தாண்டும் என கூறப்படுகிறது.

 

The post காற்றாலை மின்சாரம் உற்பத்தி அதிகரிப்பு: 4 ஆயிரம் மெகாவாட்டை தாண்டியது appeared first on Dinakaran.

Tags : Nellai ,Kumari ,Tamil Nadu ,Tamil Nadu… ,Dinakaran ,
× RELATED நெல்லை மாநகர பகுதியில் சாலையில்...