×

நாடாளுமன்ற தேர்தல் களத்தில் ‘டீப்ஃபேக்’ வீடியோவில் சிக்கிய தலைவர்கள், பிரபலங்கள்: வழக்குப்பதிவு, நோட்டீஸ், சம்மன் விவகாரங்கள் அதிகரிப்பு

புதுடெல்லி: நாடாளுமன்ற தேர்தல் களத்தில் ‘டீப்ஃபேக்’ வீடியோவால் தலைவர்கள், பிரபலங்கள் சிக்கிய நிலையில், அதுபோன்ற பதிவுகளை போட்ட நபர்கள் மீது வழக்குபதிவு, நோட்டீஸ், சம்மன் போன்ற சட்ட நடவடிக்கைகளும் தொடர்கின்றன. உலகளவில் இந்தாண்டு மட்டும் 60க்கும் மேற்பட்ட நாடுகளில் தேர்தல்கள் நடைபெறுகிறது. ஜனநாயக அடிப்படையில் முக்கியமான ஆண்டாக கருதப்பட்டாலும், தேர்தல் பிரசாரங்களில் நவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால் வெறுப்பு வளர்க்கப்படுகிறது. தலைவர்கள், நடிகர், நடிகைகள், பிரபலங்களின் போலி வீடியோக்கள், ஆபாச வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகின்றன. இந்தியாவில் நடக்கும் லோக்சபா தேர்தலிலும் இதன் தாக்கம் இருந்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அரசியல் கட்சிகள் தங்கள் பிரசாரங்களை மேற்கொண்டாலும், அதே ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ‘டீப்ஃபேக்’ வீடியோக்களும் வெளியாகி வருகின்றன.

ஒவ்வொரு நாளும், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா, பிரியங்கா, ராகுல்காந்தி, கார்கே, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்பான டீப்ஃபேக் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக அவர்களின் படங்கள் மற்றும் குரல்களை வைத்து டீப்ஃபேக் வீடியோக்கள் உருவாக்கப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை நையாண்டியாக இருந்தாலும், சில வீடியோக்கள் தனிநபர் உரிமையை பாதிப்பதாகவும் உள்ளது. அதனால் அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. அவர்களின் இமேஜ் கூட களங்கப்படுத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த தேர்தல் காலத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகள், பிரபலங்கள் சம்பந்தப்பட்ட டீப்ஃபேக் வீடியோக்களால், சம்பந்தப்பட்ட நபர்களின் மீது வழக்குப்பதிவு, நோட்டீஸ், சம்மன் போன்ற சட்ட நடவடிக்கைகளும் ஒருபக்கம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இருந்தும் தற்போதைய தேர்தலில் அதிகமாக பேசப்பட்ட டீப்ஃபேக் விவகாரங்களில் சிக்கியவர்கள் விபரம் வருமாறு:

மனோஜ் திவாரி: கடந்த 2020 பிப்ரவரியில் டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, பாஜக மூத்த தலைவரும் எம்பியுமான மனோஜ் திவாரி பேசிய வீடியோவை பாஜக ஆதரவாளர் ஒருவர் தற்போது வெளியிட்டார். டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் தேர்தல் வாக்குறுதிகளுக்கு எதிராக, அரியான்வி மொழியில் மனோஜ் திவாரி பேசுவது போன்று இருந்தது. மற்றொரு வீடியோவில், அதே விஷயங்களை ஆங்கிலத்தில் பேசுவது போல் இருந்தது. இந்த இரண்டு வீடியோக்களும் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டவையாகும். ஐடியாஸ் ஃபேக்டரி என்ற சண்டிகர் நிறுவனம் இந்த வீடியோவை உருவாக்கி உள்ளது. தொடர்ந்து குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு இந்தியில் மனோஜ் திவாரி வாழ்த்து தெரிவிக்கும் வீடியோவும் வெளிவந்தது, இந்த வீடியோவை அரியான்வி மற்றும் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து வைரலாக்கினர்.

மம்தா பானர்ஜி: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் அனிமேஷன் வீடியோ, பாஜகவினரால் அதிகளவில் பகிரப்படுகிறது. ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஒரு வீடியோவை வெளியிட்ட நபருக்கு எதிராக கடந்த 6ம் தேதி கொல்கத்தா காவல்துறை நோட்டீஸ் அனுப்பியது. இவ்வாறாக ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவதூறு செய்யும் வகையில் வீடியோ வெளியிட்ட 70க்கும் மேற்பட்டோருக்கு மேற்குவங்க காவல் துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

ரன்வீர் சிங்: பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் தொடர்பான போலி வீடியோ ஒன்று கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. அதில், வேலையின்மை, பணவீக்கம் போன்ற பிரச்னை ெதாடர்பாக பிரதமர் மோடிக்கு எதிராக விமர்சனம் செய்யும் வகையில் இருந்தது. இந்த வீடியோ ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டதாக கண்டறியப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட பதிவாளருக்கு எதிராக ரன்வீர் சிங் அளித்த புகாரின் அடிப்படையில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமீர் கான்: பாலிவுட் நடிகர் அமீர் கான் தொடர்பான வீடியோவில், ‘நாட்டு மக்களின் ஒவ்வொரு நபரின் ெபயரிலும் ரூ.15 லட்சத்தை பாஜக அரசு டெபாசிட் செய்ய வேண்டும்’ என்று பேசுவது போல் இருந்தது. இதேபோன்ற மற்றொரு வீடியோவில், அவர் காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு கேட்பதை போன்று இருந்தது. தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘நான் எந்த கட்சிக்கும் ஆதரவாக வாக்கு சேகரிக்கவில்லை. நான் பேசியதாக பகிரப்படும் வீடியோவானது போலியானது’ என்று கூறினார்.

அமித் ஷா: உள்துறை அமைச்சர் அமித்ஷா, தெலங்கானா பேரணியில் உரையாற்றிய வீடியோ ஒன்று வைரலானது. அதில் அவர், ‘எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசிக்கான இடஒதுக்கீடு அரசியலமைப்பிற்கு விரோதமானது. பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் இந்த இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம்’ என்று கூறியது போன்று உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக அமித் ஷா அளித்த பேட்டியில், ‘இந்த வீடியோ போலியானது. நான் பேசிய உரையின் சில பகுதிகள் ெவட்டப்பட்டுள்ளது’ என்றார்.

அரவிந்த் கெஜ்ரிவால்: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட பிறகு, அவரது தொடர்பான டீப்ஃபேக் வீடியோக்கள் அதிகமாக பகிரப்படுகின்றன. குறிப்பாக அவர் சிறையில் இருப்பது போன்றும், அன்னா ஹசாரே அவரை திட்டுவது போன்றும், டெல்லி மதுபான முறைகேடு விவகாரம் தொடர்பாகவும் டீப்ஃபேக் வீடியோக்கள் வெளியாகின. இந்த வீடியோக்கள் யாவும் பாஜக ஆதரவாளர்களால் வெளியிடப்பட்டது.

The post நாடாளுமன்ற தேர்தல் களத்தில் ‘டீப்ஃபேக்’ வீடியோவில் சிக்கிய தலைவர்கள், பிரபலங்கள்: வழக்குப்பதிவு, நோட்டீஸ், சம்மன் விவகாரங்கள் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : New Delhi ,
× RELATED எலான் மஸ்க் கருத்தால் சமூக ஊடகங்களில்...