×

டெல்லி மருத்துவமனையில் நள்ளிரவில் பயங்கர தீ 7 பச்சிளம் குழந்தைகள் கருகி பலி: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்

புதுடெல்லி: டெல்லியில் தனியார் குழந்தைகள் மருத்துவமைனயில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. டெல்லியின் கிழக்கு பகுதியில் விவேக் விஹார் பகுதியில் பச்சிளம் குழந்தைகளை பராமரிப்பதற்கான தனியார் மருத்துவமனை செயல்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்ததும் 16 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன.

அப்பகுதி மக்கள் உதவியுடன் மருத்துவமனையின் முதல் தளத்தில் இருந்து 12 பச்சிளம் குழந்தைகளை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். உடனடியாக அந்த குழந்தைகள் மற்றொரு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால், சிகிச்சை பலனின்றி 7 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. 5 குழந்தைகள் லேசான தீக்காயத்துடன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றன. இந்த மருத்துவமனை குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் அமைந்துள்ளது.

தீப்பிடித்த சமயத்தில் மருத்துவமனையின் 2வது மாடியில் இருந்த ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. மேலும் அருகில் இருந்த 2 கட்டிடங்கள் சேதம் அடைந்தன. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்படுகிறது. இதற்கிடையே, தலைமறைவாக இருந்த மருத்துவமனை உரிமையாளர் நவீன் கிச்சி மீது விவேக் விஹார் போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை நேற்று கைது செய்தனர்.

இந்த விபத்தில் பலியான குழந்தைகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 7 பச்சிளம் குழந்தைகள் பலியான செய்தி இதயத்தை நொறுக்குவதாக இருப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வேதனை தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்களும், அலட்சியத்திற்கு காரணமானவர்களும் தப்ப முடியாது என்றும் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உறுதி அளித்துள்ளார். மேலும், உரிய நடவடிக்கை எடுக்க மாநில சுகாதார அமைச்சர் பரத்வாஜுக்கு உத்தரவிட்டுள்ளார். தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையமும் இவ்விவகாரத்தை விசாரிக்க தனி குழுவை அமைத்துள்ளது.

* வீடியோ எடுத்தவர்களால் மீட்புப் பணியில் சிரமம்
மருத்துவமனை கொளுந்து விட்டு எரிந்ததும், அதை தங்கள் செல்போனில் வீடியோ எடுக்க பெரும் கூட்டம் கூடியது. பலரும் ஆபத்தை அறியாமல் தீக்கு அருகில் சென்றனர். இதனால் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணி மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. அதே சமயம் சில உள்ளூர்வாசிகள் மிகுந்த பொறுப்புடனும் தைரியத்துடனும் மருத்துவமனையின் பின்பக்கம் சென்று ஜன்னலை உடைத்து, தீக்கு நடுவே சிக்கியிருந்த 12 பச்சிளம் குழந்தைகளை மீட்டு வர உதவி உள்ளனர். அவர்களுக்கு தீயணைப்பு துறை நன்றி தெரிவித்துள்ளது.

* ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பியதால் விபத்தா?
தீ விபத்து ஏற்பட்டதும், அப்பகுதியில் உள்ள ஷாஹீத் சேவா தன்னார்வ அமைப்பை சேர்ந்தவர்கள் தான் முதலில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவமனையில் இருந்து ஊழியர்கள் அனைவரும் பயந்து ஓடிவிட்டதாக அப்பகுதி மக்கள் கூறி உள்ளனர். பொதுமக்கள் சிலரும், தன்னார்வ அமைப்பினரும் தீயணைப்பு துறையினருடன் இணைந்து 12 பச்சிளம் குழந்தைகளை மீட்டுள்ளனர். இந்த மருத்துவமனையில் சட்டவிரோதமாக ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். அதன்காரணமாக தீ விபத்து நடந்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

The post டெல்லி மருத்துவமனையில் நள்ளிரவில் பயங்கர தீ 7 பச்சிளம் குழந்தைகள் கருகி பலி: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Delhi ,President ,PM ,NEW DELHI ,Pachilam ,Vivek Vihar ,eastern ,
× RELATED குவைத் தீ விபத்தில்...