×

வேலை வாங்கி தருவதாக கூறி காதல் திருமணம் செய்த நண்பர் மனைவிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது

கோபி: நிதி நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி, நண்பரின் மனைவிக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கோவை வடமதுரை, பி.ஜி.புதூரில் காதல் திருமணம் செய்த தம்பதி வசித்து வருகின்றனர். இருவரும் தற்போது வேலை இல்லாமல் இருந்து வந்தனர். அந்த பெண் செவிலியர் பயிற்சி முடித்துள்ளார். இதையடுத்து, கணவரின் நண்பரான ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையத்தை சேர்ந்த தரண் (19) என்பவரிடம் கணவன், மனைவி இருவரும் தொலைபேசியில் பேசி வேலை இருந்தால் ஏற்பாடு செய்து கொடுக்குமாறு கேட்டுள்ளனர். தரணும் வேலை வாங்கி தருவதாக அவர்களிடம் கூறியுள்ளார்.

இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு தரண், அவர்களிடம் போனில் பேசியபோது, நிதி நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார். அதைத்தொடர்ந்து கணவன், மனைவி இருவரும் கோவையிலிருந்து பஸ்சில் கோபி வந்தனர். அவர்களுக்காக தரண் பைக்குடன் பஸ் நிலையத்தில் காத்திருந்தார். கணவன், மனைவி வந்ததும் அவர்களிடம் சிறிது நேரம் தரண் வேலைபற்றி பேசிக் கொண்டிருந்தார்.

பின்னர் தரண், அந்தப் பெண்ணை மட்டும் தனது பைக்கில் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். வேட்டைக்காரன் கோவில், கீழ்பவானி வாய்க்கால் பகுதிக்கு சென்றபோது தரண் பைக்கை நிறுத்தி யாரும் இல்லாத இடத்துக்கு அந்தப் பெண்ணை இழுத்துச்சென்று அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்தப் பெண்ணிடம் இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக தரண் மிரட்டியுள்ளார். பின்னர் கொளப்பலூரில் பெண்ணை இறக்கி விட்டுள்ளார்.

அந்த பெண் நடந்தவற்றை அழுதுகொண்டே தனது கணவரிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெண்ணின் கணவர் உடனடியாக கோபி போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் தரணை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோபி சிறையில் அடைத்தனர்.

The post வேலை வாங்கி தருவதாக கூறி காதல் திருமணம் செய்த நண்பர் மனைவிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Gobi ,PG Putur ,Vadamadurai ,Coimbatore ,
× RELATED ஒன்றிய இணை அமைச்சராக தொடருவேன்: கேரள...