×

பாஜ எப்படி 400 தொகுதிகளில் ஜெயிக்கும்? இந்தியா கூட்டணி தான் ஆட்சியமைக்கும்: மல்லிகார்ஜுன கார்கே நம்பிக்கை

பெங்களூரு: கர்நாடக மாநிலம் கலபுர்கியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ‘இந்தியா கூட்டணி பெரும்பான்மையை பெற்று ஆட்சியமைப்பதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. இந்தியா கூட்டணிக்கு நல்லதொரு சூழலை மக்கள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றனர். இந்த தேர்தல் மக்களுக்கும் பிரதமர் மோடிக்கும் இடையேயான போட்டி. ஏனெனில், விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை போன்ற காரணங்களால் மக்கள் கடும் அதிருப்தியிலும் விரக்தியிலும் உள்ளனர்.  தன்னிச்சை அதிகாரம் பெற்ற மற்றும் புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்தி, மோசமான நிர்வாகம் செய்துவரும் பாஜ மீது கடும் அதிருப்தியில் இருக்கும் மக்கள், இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக இருக்கின்றனர். எனவே

இந்தியா கூட்டணி அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. பாஜவை வீழ்த்துவதற்கான திறனும் வலிமையும் வாய்ப்புகளும் இந்தியா கூட்டணிக்கு இருக்கிறது. துல்லியமாக இந்தியா கூட்டணி எத்தனை சீட்டுகளை ஜெயிக்கும் என்று சொல்ல முடியாது. அரசியலில் அப்படியெல்லாம் எண்களை எளிதாக கணக்கிட்டு சொல்லிவிட முடியாது. அந்த கணக்கீடுகள் எல்லாம் மிகக்கடினமானது. பாஜ ஒவ்வொரு இடமாக தோற்றுவருகிறது. பிறகு எந்த நம்பிக்கையில் பாஜ 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்று பிரதமர் மோடி கூறுகிறார்?

எங்கள் கூட்டணியில் திமுக எப்போதும் இருக்கும். கேரளாவில் அதிக இடங்களில் வெற்றி பெறுவோம். மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும். பாஜ எப்படி 400 இடங்களை பிடிப்பதாக கூறுகிறது என்பதை என்னால் ஊகிக்க முடியவில்லை. கடந்த முறை ராஜஸ்தானில் நாங்கள் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்கவில்லை. ஆனால் இம்முறை 7-8 தொகுதிகளில் ஜெயிப்போம். சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்திலும் எங்களுக்கான ஆதரவு பெருகியுள்ளது. எனினும் பாஜவினர் 400 இடங்களை பிடிப்போம் என்று கூறுவது எனக்கு வியப்பாக இருக்கிறது‘ என்றார்.

The post பாஜ எப்படி 400 தொகுதிகளில் ஜெயிக்கும்? இந்தியா கூட்டணி தான் ஆட்சியமைக்கும்: மல்லிகார்ஜுன கார்கே நம்பிக்கை appeared first on Dinakaran.

Tags : BJP ,India alliance ,Mallikarjuna Kharge ,Bengaluru ,Congress ,President ,Kalaburki, Karnataka ,Modi ,Dinakaran ,
× RELATED உபியில் இந்தியா கூட்டணி வெற்றி...