×

பெட்டிக்கடைக்குள் புகுந்து சிறுமியைஅச்சுறுத்தி பூனையை கடித்த விவகாரம்: நாய் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் தெற்கு மாடவீதியை சேர்ந்தவர் கருணாகரன்(68). இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை ஒன்று நடத்தி வருகிறார். கருணாகரன் தனது மனைவியின் உறவுக்கார 15 வயது சிறுமியை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். வழக்கம் போல் நேற்று முன்தினம் சிறுமி கடையில் இருந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த ஜெயா என்பவரின் மகன்களான தனசேகர் மற்றும் புருஷோத்தமன் ஆகியோர் உயர் ரகத்தை சேர்ந்த 3 நாய்களை வளர்த்து வருகின்றனர். ஜெயா மகன் நேற்று முன்தினம் இரவு 3 நாய்களை அழைத்து கொண்டு நடைபயிற்சியில் ஈடுபட்டார்.

அப்போது பூனை ஒன்று சாலையின் இடையே ஓடியது. இதை பார்த்த 3 நாய்களில் ஒன்று பூனையை கடிக்க பாய்ந்தது. ஆனால் நாயை அதன் உரிமையாளர் விடவில்லை. ஒரு கட்டத்தில் நாய் உரிமையாளரிடம் இருந்து தப்பி பூனை குட்டி சென்ற பெட்டிக்கடைக்குள் புகுந்தது. அப்போது கடையில் இருந்த சிறுமி நாயை கண்டதும் அலறி சத்தம் போட்டார். அப்போது நாய் பூனை குட்டியை கடித்து குதறியது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு படுகாயமடைந்த பூனைகுட்டியை கருணாகரன் மீட்டு கால்நடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் சம்பவம் குறித்து பெட்டிக்கடை உரிமையாளர் கருணாகரன் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் எனது பெட்டிக்கடைக்குள் புகுந்து சிறுமியை கடிக்க முயன்றதாகவும், பிறகு பூனை குட்டியை கடித்த நாய் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார். அந்த புகாரின் படி போலீசார் விசாரணை நடத்தி, நாய் உரிமையாளர்களான ஜெயா, தனசேகர், புருஷோத்தமன் ஆகியோர் மீது ஐபிசி 289, 336 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பெட்டிக்கடைக்குள் புகுந்து சிறுமியைஅச்சுறுத்தி பூனையை கடித்த விவகாரம்: நாய் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Karunakaran ,Nungampakkam South Madaveedi, Chennai ,Dinakaran ,
× RELATED குரூப் 4 தேர்வு எழுத சென்ற பட்டதாரி பெண் மாயம்