×

வேங்கைவயல் விவகாரம்: காவலரிடம் 8 மணி நேரம் சிபிசிஐடி விசாரணை

புதுக்கோட்டை: வேங்கைவயல் விவகாரத்தில் போலீஸ்காரரிடம் நேற்று 8 மணி நேரம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் ஆதிதிராவிடர் குடியிருப்பிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில், கடந்த 2022 டிசம்பர் 25ம் தேதி மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தெரியவந்தது. இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிந்து கடந்த 494 நாட்களாக சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில், 221 நபர்களிடம் நேரடி சாட்சியங்களும், 5 சிறார்கள் உட்பட 31 பேரிடம் டிஎன்ஏ மாதிரி பரிசோதனை, 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.

வழக்கு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படும் நிலையில், புதுக்கோட்டை நிஜாம் காலனியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராக வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த போலீஸ்காரர் முரளி ராஜாவுக்கு, நேற்றுமுன்தினம் சம்மன் அனுப்பப்பட்டது. இதனையடுத்து நேற்று காலை 11 மணிக்கு போலீஸ்காரர் முரளி, அவரது வழக்கறிஞருடன் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார். விடுதலை சிறுத்தை கட்சியினரும் திரண்டதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

வழக்கறிஞர்களை வெளியே அனுப்பிவிட்டு முரளி ராஜாவிடம், டிஎஸ்பி கல்பனாதத் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தினர். முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. மதியம் 2 மணியளவில் விஏஓ ரமேஷ் உள்ளிட்ட வருவாய்துறையினர் வந்து விளக்கம் அளித்தனர். போலீஸ்காரர் முரளி ராஜாவிடம் விசாரணை இரவு 7 மணியளவில் நிறைவு பெற்றது. காலை 11 மணிக்கு தொடங்கிய விசாரணை இரவு 7 மணிவரை 8 மணி நேரம் நடந்தது. சந்தேகத்தின் அடிப்படையில் அவரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொண்டனர். போலீஸ்காரர் முரளி ராஜா தற்போது மனமேல்குடி காவல் நிலையத்தில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

The post வேங்கைவயல் விவகாரம்: காவலரிடம் 8 மணி நேரம் சிபிசிஐடி விசாரணை appeared first on Dinakaran.

Tags : CBCID ,Pudukottai ,Venkaiwayal ,Adi Dravidar ,Pudukottai district ,Dinakaran ,
× RELATED வேங்கைவயல் வழக்கு விசாரணை: புதுகை அலுவலகத்தில் போலீஸ்காரர் ஆஜர்