×

மலர் கண்காட்சி 26ம் தேதி வரை நீட்டிப்பு மலர் அலங்காரங்களை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்

ஊட்டி : கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு கோடை விழா நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் மே மாதம் நடத்தப்படும் இந்த கோடை விழாவின் போது, தோட்டக்கலைத்துறை சார்பில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, பழக்கண்காட்சி மற்றும் காய்கறி கண்காட்சி நடத்தப்படுகிறது.

மேலும், வருவாய்த்துறை சார்பில் வாசனை திரவிய பொருட்களின் கண்காட்சி நடத்தப்படும். ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடக்கும் மலர் கண்காட்சியை காண பல லட்சம் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இதற்காக, பூங்கா தயார் செய்யப்பட்டு பல லட்சம் மலர் செடிகளில் வண்ண வண்ண மலர்கள் பூத்துக்குலுங்கும். மேலும், பல லட்சம் கார்னேசன் மலர்களை கொண்டு பல வகையான மலர் அலங்காரமும் செய்யப்படும்.

நாடாளுமன்ற தேர்தல் காரணமாக இம்முறை காய்கறி கண்காட்சி மற்றும் வாசனை திரவிய பொருட்கள் நடத்தப்படவில்லை. மலர் கண்காட்சி மற்றும் ரோஜா கண்காட்சி கடந்த 10ம் தேதி தேதி ஊட்டியில் துவங்கியது. மலர் கண்காட்சியில், ஒரு லட்சம் கார்னேசன் மலர்களை கொண்டு டிஸ்னி வேர்ல்டு மலர் அலங்காரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பல ஆயிரம் மலர்களை கொண்டு நீலகிரி மலை ரயில், காளான், பிரமீடு, ஆக்டோபஸ், கிதார், பூங்கொத்து, படகு உட்பட பல்வேறு மலர் அலங்காரங்கள் பல ஆயிரம் கொய் மலர்களை கொண்டு உருவாக்கப்படவுள்ளது. மேலும், 126வது பிளவர் ஷோ போன்ற மலர் அலங்காரம் பல ஆயிரம் மலர்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. பல ஆயிரம் கொய் மலர்களை கொண்டு 10 அலங்கார வளைவுகள் உட்பட பல்வேறு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளது.

இந்த மலர் கண்காட்சியை கடந்த 11 நாட்களாக சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து சென்றனர். இந்நிலையில், ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறையாத நிலையில், மேலும், 6 நாட்கள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. வரும் 26ம் தேதி வரை நடக்கிறது. இந்நிலையில், மலர் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள மலர் அலங்காரங்கள் அகற்றப்படாத நிலையில் வரும் 26ம் தேதி வரை கண்டு ரசிக்கலாம். நேற்றும் ஊட்டியில் மழை பெய்த போதிலும், ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

களைக்கட்டும் பைன்பாரஸ்ட்: ஊட்டி- கூடலூர் சாலையில் தலைக்குந்தா அருகே காமராஜர் சாகர் அணை உள்ளது. இந்த அணையின் ஒரு பகுதியில் பைன் மரங்கள் நிறைந்த வனப்பகுதி உள்ளது. வனங்களுக்கு நடுவே உள்ள இந்த பைன்பாரஸ்ட் பகுதியை பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவது வழக்கம்.

இதனால், இந்த பகுதியில் எப்போதும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும். பைன் பாரஸ்ட் நடுவே புகைப்படம் எடுத்து கொள்ளவும் ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக கேரளா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர். இந்நிலையில், ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ள நிலையில் அவ்வாறு வர கூடிய சுற்றுலா பயணிகள் சூட்டிங்மட்டம் செல்லும் வழியில் அமைந்துள்ள பைன்பாரஸ்ட் பகுதிக்கு சென்று பார்வையிட்டு வருகின்றன. இதனால், அப்பகுதி களைக்கட்டியுள்ளது.

The post மலர் கண்காட்சி 26ம் தேதி வரை நீட்டிப்பு மலர் அலங்காரங்களை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Tags :
× RELATED தருமபுரி, நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட 7...