×

புதுச்சேரி கடலில் தடையை மீறி குளித்த இளைஞர்களுக்கு நூதன தண்டனை

புதுச்சேரி : புதுச்சேரியில் தடையை மீறி குளித்த இளைஞர்களுக்கு போலீசாரால் நூதன தண்டனை விதிக்கப்பட்டது. சுற்றுலா தலமான புதுச்சேரிக்கு தினமும் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை அதிகம் வருவது கடற்கரை பகுதிக்குதான். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கடலில் இறங்கி குளித்து மகிழ்கின்றனர். ஆனால், சமீபகாலமாக வெளிமாநிலத்தவர் ராட்சத அலையில் சிக்கி உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது. இதனால் கடலில் இறங்கி குளிக்க காவல் துறையினர் தடை விதித்துள்ளனர். இதையும் மீறி பலர் கடலில் இறங்கி குளித்து வருகின்றனர்.

மழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரியில் கடந்த 4 நாட்களாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் மீனவர்களே கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் சுற்றுலா பயணிகள் யாரும் கடற்கரைக்கு செல்வதை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், நேற்று காலை கடற்கரைப் பகுதியில் வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் தலைமை செயலகம் எதிரே உள்ள கடற்கரை பகுதியில் குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த போலீசார் அவர்களை பிடித்து கடற்கரையில் குளிக்கக்கூடாது என்று பதாகை வைத்துள்ளோம். இதையும் மீறி குளித்தது ஆபத்தானது என அவர்களை எச்சரித்தனர். மேலும் தடையை மீறி கடலில் குளித்த குற்றத்துக்காக, கடற்பகுதி முழுவதையும் சுத்தம் செய்ய வேண்டுமென நூதன தண்டனை விதித்தனர். அதைத் தொடர்ந்து அந்த இளைஞர்கள் கடற்பகுதி முழுவதும் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்து இளைஞர்கள் புறப்பட்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

The post புதுச்சேரி கடலில் தடையை மீறி குளித்த இளைஞர்களுக்கு நூதன தண்டனை appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Tamil Nadu ,Karnataka ,Andhra Pradesh ,Kerala ,
× RELATED புதுச்சேரியில் பள்ளிகளுக்கு ஜூன் 12ம் தேதி வரை கோடை விடுமுறை நீட்டிப்பு