×

உடல்நல குறைவால் சிகிச்சை பெற்றுவந்த நாகை கம்யூனிஸ்ட் எம்பி எம்.செல்வராசு காலமானார்: இன்று காலை உடல் அடக்கம்

நாகப்பட்டினம்: நாகை இந்திய கம்யூனிஸ்ட் எம்பி எம்.செல்வராசு உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று காலமானார். அவரது உடல் சொந்த ஊரில் இன்று காலை அடக்கம் செய்யப்படுகிறது. நாகப்பட்டினம் மக்களவை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் எம்பி எம்.செல்வராசு (67). திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே கோவில் சித்தமல்லியை சேர்ந்த இவர் இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகக்குழு உறுப்பினராக இருந்து வந்தார். கடந்த சில மாதங்களாக நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த இவருக்கு சிறுநீரக தொற்றும் இருந்து வந்தது. ஏற்கனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து பல ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் மூச்சுத்திணறல் காரணமாக திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்நிலையில் நுரையீரல் தொற்று பாதிப்புக்காக கடந்த 2ம் தேதி சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு நேற்று அதிகாலை 2.40 மணிக்கு சிகிச்சை பலனின்றி காலமானார்.

பின்னர் சென்னையில் இருந்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த கோவில் சித்தமல்லிக்கு செல்வராசு உடல் நேற்று மதியம் 12.45 மணிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.எஸ்.விஜயன் உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இன்று (14ம்ேததி) காலை 10 மணிக்கு அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது. மறைந்த எம்.செல்வராசு, திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் கப்பலுடையான் கிராமத்தில் விவசாயி முனியன்- குஞ்சம்மாள் தம்பதியின் மகனாக 1957 மார்ச் 16ல் பிறந்தார்.

முன்னாள் எம்பியான சித்தமல்லி முருகையனின் மூத்த மகள் கமலவதனத்தை மணந்தார். இவர்களுக்கு செல்வப்பிரியா, தர்ஷினி என்ற 2 மகள்கள் உள்ளனர். செல்வப்பிரியாவுக்கு கடந்தாண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திருமணம் நடந்தது. சிறுவயதில் இருந்தே கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்து செல்வராசு செயல்பட்டார். பள்ளி கல்வியை முடித்ததும் திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் மாணவர் பெருமன்றம், இளைஞர் பெருமன்றம் போன்ற அமைப்புகளில் தீவிரமாக செயல்பட்ட எம்.செல்வராசு, அதன்பின் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட, மாநில பொறுப்புகளை ஏற்று சிறப்பாக பணியாற்றினார். திருவாரூர் மாவட்ட துணை செயலாளர், நாகப்பட்டினம் மாவட்ட செயலாளர் ஆகிய பொறுப்புகளில் நீண்ட காலம் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

அவரது மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில், மறைந்த தலைவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் கட்சி அமைப்புகள், செங்கொடியை அரைக் கம்பத்திற்கு இறக்கி விட வேண்டும் என கூறியுள்ளார்.

டெல்டா மக்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை:
நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய குழு உறுப்பினருமான செல்வராசு மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். டெல்டா மாவட்டங்களுக்கு ரயில்வே திட்டங்கள் வேண்டியும், அப்பகுதி விவசாயிகளின் உரிமைகளுக்காகவும் பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளார். என் மீது கொள்கை ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும், இருவரும் டெல்டாகாரர்கள் என்ற வகையிலும் மிகுந்த பாசமும் நன்மதிப்பும் கொண்டவர். அவரது மறைவு பொதுவுடைமை இயக்கத்துக்கும், டெல்டா மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு.அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும், நாகை தொகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

4 முறை எம்பி
1989ம் ஆண்டு நாகப்பட்டினம் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு எம்பியாக முதல்முறையாக வெற்றி பெற்றார். இதைதொடர்ந்து 1996, 1998, 2019ம் ஆண்டுகளில் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1989 ஜூன் 12ம் தேதி காவிரி நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்தி தஞ்சை ராஜராஜ சோழன் சிலை முதல் வேதாரண்யம் ராஜாஜி பூங்கா வரை 110 கிமீ தூரம் மனித சங்கிலி போராட்டம் நடத்தியதில் முன்னணி பங்கு வகித்தார். ஓஎன்ஜிசி தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்களை அணி திரட்டி தொழிற்சங்கம் அமைத்ததுடன் தமிழ்நாடு ஏஐடியூசி துணைத்தலைவர் பொறுப்பிலும் இருந்தார்

உடல்நிலை பாதிப்பிலும் பிரசாரம்
உடல்நல குறைவு காரணமாக தற்போது நடந்த மக்களவை தொகுதியில் செல்வராசு போட்டியிடவில்லை. எனினும் நாகை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் வை.செல்வராஜிக்கு ஆதரவாக எம்.செல்வராசு கடந்த மாதம் பிரசாரம் செய்தார். செல்வராசுக்கு ஏற்கனவே அவரது சகோதரி சாரதாமணி தானம் அளித்த சிறுநீரகம் பொருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post உடல்நல குறைவால் சிகிச்சை பெற்றுவந்த நாகை கம்யூனிஸ்ட் எம்பி எம்.செல்வராசு காலமானார்: இன்று காலை உடல் அடக்கம் appeared first on Dinakaran.

Tags : Nagai Communist ,M. Selvarasu ,Nagapattinam ,Naga ,Communist ,Lok Sabha Constituency ,Nagai ,Dinakaran ,
× RELATED நாகை நாடாளுமன்ற தொகுதியில் 4 முறை...