×

பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் பலி: ஒப்பந்ததாரர், போர்மேன் கைது


சிவகாசி: சிவகாசி அருகே 10 பேர் உயிரிழந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில், சட்ட விரோதமாக ஆலையை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்த ஒப்பந்ததாரர், போர்மேன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ஆலை உரிமையாளரை தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். 14 பேர் படுகாயம் அடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் தீக்காய சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர். இதில் 3 பேர் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து கீழத்திருத்தங்கல் விஏஓ சங்கிலிபிரபு கொடுத்த புகாரின்பேரில், ஆலை உரிமையாளர் சரவணன்(48), போர்மேன் சுரேஷ்(43), ஒப்பந்ததாரர் முத்துகிருஷ்ணன்(39) ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் ஒப்பந்ததாரர் முத்துகிருஷ்ணனை தென்காசியில் தனிப்படை போலீசார் நேற்று அதிகாலை கைது செய்தனர்.

போர்மேன் சுரேஷ் சிவகாசி அருகே பாறைப்பட்டி செக்போஸ்ட்டில் உள்ள போலீசாரிடம் சரணடைந்தார். ஆலை உரிமையாளர் சரவணனை தனிப்படையினர் தேடி வருகின்றனர். வெடிவிபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணத் தொகையாக பட்டாசு ஆலை நிர்வாகம் சார்பாக தலா ரூ5 லட்சத்து 50 ஆயிரம் நேற்று வழங்கப்பட்டது. ஒரே குடும்பத்தில் 4 பெண்கள் பலி: வெடி விபத்தில் சிவகாசி காந்திநகரை சேர்ந்த ஆவுடையம்மாள்(70), அவரது மகள் முத்து (50), பேத்திகளான லட்சுமி, பேச்சியம்மாள்(25) ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இதனால் கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.

The post பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் பலி: ஒப்பந்ததாரர், போர்மேன் கைது appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,firecracker ,Virudhunagar district ,Dinakaran ,
× RELATED சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10...