×

நீலகிரி, ஈரோடு, தென்காசி, மதுரை, விழுப்புரத்தை தொடர்ந்து தென்சென்னை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமரா பழுது: தேர்தல் ஆணையம் மீது கட்சி நிர்வாகிகள் அதிருப்தி

சென்னை: நீலகிரி, மதுரை, ஈரோடு, தென்காசி, விழுப்புரத்தை தொடர்ந்து தென்சென்னை தொகுதி மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த மையத்தில் சிசிடிவி கேமராக்கள் பழுதடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதியிலும் கடந்த மாதம் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. இந்த மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல் பகுதியில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ வீரர்கள், 2வது அடுக்கில் தமிழக சிறப்பு போலீஸ் படையினரும், 3வது பகுதியில் தமிழ்நாடு போலீசாரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு ஸ்டிராங் ரூம் உள்ளேயும், வெளியேயும் நூற்றுக்கணக்கான சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, அனைத்துக்கட்சி வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் டிவியில் 24 மணி நேரமும் பார்வையிட வசதி செய்யப்பட்டுள்ளது. மாவட்ட தேர்தல் அதிகாரிகளும், உயர் போலீஸ் அதிகாரிகளும் தினசரி அங்கு சென்று பாதுகாப்பு பணிகளை கண்காணித்து வருகிறார்கள். இந்நிலையில் தென்சென்னை தொகுதியில் பதிவான மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்டிராங் ரூமில் சிசிடிவி கேமராக்கள் பழுதாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு இயந்திரங்கள் கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்டிராங் ரூமில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கு எண்ணும் மையத்தில் மொத்தம் 210 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இங்கு தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், 2 சிசிடிவி கேமராக்கள் நேற்று முன்தினம் (புதன்) நள்ளிரவு திடீரென பழுதடைந்துள்ளது. இந்த பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் கேமராக்கள் பழுதடைந்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து அரசியல் கட்சி நிர்வாகிகள் புகார் அளித்தனர். தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் நேற்று காலை பழுதான கேமராக்கள் உடனடியாக அகற்றப்பட்டு 2 புதிய கேமராக்கள் பொருத்தப்பட்டன. தற்போது அங்கு அனைத்து கேமராக்கள் முழு அளவில் இயங்கி வருகிறது.

இதுகுறித்து அரசியல் கட்சி நிர்வாகிகள் கூறும்போது, ‘தமிழகத்தில் தேர்தல் முடிந்து 45 நாட்கள் வாக்கு இயந்திரங்களை பாதுகாப்பாக வைப்பது என்பது ஆபத்தான நடைமுறை. 7 கட்ட தேர்தல் என்பது தேர்தல் ஆணையத்தின் தவறான முடிவு. இரண்டு அல்லது மூன்று வாரங்களில் தேர்தலை முடித்து வாக்குகள் எண்ணப்பட்டிருக்க வேண்டும். தற்போது மழை, காற்று, அதிக வெயில் காரணமாக கேமராக்கள் வேலை செய்யவில்லை என்று கூறுவது ஏற்கும்படி இல்லை. இது தேர்தல் ஆணையத்தின் தோல்வியையே காட்டுகிறது. ஏற்கனவே நீலகிரி, ஈரோடு, தென்காசி, மதுரை, விழுப்புரம் மையங்களில் கேமராக்கள் பழுதடைந்தது. தற்போது தென்சென்னையில் பழுதடைந்துள்ளது. இனியாவது தேர்தல் ஆணையம் விழிப்புடன் இருந்து, புகார்கள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்றனர்.

* தேர்தல் அதிகாரி ஆலோசனை
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று மாலை அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்டிராங் ரூமில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் பழுதின்றி செயல்பட எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள், வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடுவோருக்கு பயிற்சி அளித்தல், மைக்ரோ பார்வையாளர்கள் நியமித்தல் ஆகியவை குறித்து ஆலோசித்தார். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறும்போது, ‘தமிழகத்தில் வாக்கு எண்ணும் ஏற்பாடுகள், பயிற்சி மற்றும் தொடர்புடைய விஷயங்கள் குறித்து அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் விவாதிக்கப்பட்டது. அப்போது, வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் சிசிடிவி கேமரா பழுது ஏற்படாமல் பார்த்துக்கொள்ள நடவடிக்கை எடுப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது’ என்றார்.

The post நீலகிரி, ஈரோடு, தென்காசி, மதுரை, விழுப்புரத்தை தொடர்ந்து தென்சென்னை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமரா பழுது: தேர்தல் ஆணையம் மீது கட்சி நிர்வாகிகள் அதிருப்தி appeared first on Dinakaran.

Tags : Nilgiris ,Erode ,Tenkasi ,Madurai ,Villupura ,South Chennai ,Election Commission ,CHENNAI ,Villupuram ,Tenchennai ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED நீலகிரியில் நிலச்சரிவுகளை தடுக்க...