×

கொளுத்தும் வெயிலில் ரோட்டில் மட்டையாகி கிடக்கும் ‘குடி’மகன்கள்

*அனாதைகளை அரசு கவனிக்குமா?

புதுச்சேரி : புதுச்சேரியில் நாளுக்குநாள் வெயில் கொடுமை அதிகமாகி வருகிறது. கோடை வெயிலின் தாக்கம் தமிழகத்தில் அதிகபட்சமாக 110 டிகிரி வரை வாட்டி வதைக்கும் நிலையில் புதுச்சேரியிலும் ஏற்கனவே 100 டிகிரியை தாண்டி விட்டது. இருப்பினும் கோடை வெயிலின் தாக்கம் மற்ற பகுதிகளை ஒப்பிடுகையில் குறைவாக இருப்பினும் தகிக்கும் வெயிலால் வீடுகளுக்குள் பொதுமக்கள் முடங்கியுள்ளனர். மாலை நேரங்களில் கடற்கரை, பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இதனிடையே புதுச்சேரியில் கோடை வெயில் தாக்கத்தில் குடிமகன்களும் சிக்கி பரிதவிப்பதை ஆங்காங்கே காண முடிகிறது. கருவடிக்குப்பம், மேட்டுப்பாளையம், கொம்பாக்கம், வில்லியனூர் உள்பட நகர, கிராமப்புறங்களில் உள்ள கள், சாராயக்கடைக்கு காலை 10, 11 மணிக்கெல்லாம் சென்று குடித்துவிட்டு நடுரோட்டில் விழுந்து கிடக்கும் நிலையில் 12 மணிக்குமேல் உச்சி வெயிலில் இருந்து அவர்கள் தப்பிக்க முடியாமல் படும்பாடு பரிதாபமாக உள்ளது.

குடிபோதையில் கிடக்கும் நபர்களை பொதுமக்கள் பார்த்துவிட்டு, உதவி செய்ய முடியாமல் நகருவதோடு தெரிந்த நபர்களாக இருப்பின் அவர்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து வருகின்றனர். இதில் பெரும்பாலானோர் வெளிமாநிலத்தில் இருந்து வந்த அனாதைகளாக உள்ளனர்.

பாட்டில், பேப்பர் பொறுக்கி பிளாட்பாரத்தில் தங்கியிருப்பவர்களில் பெரும்பாலானோர்தான் இதுபோன்று அதிகளவில் குடித்துவிட்டு நடுரோட்டில் மயங்கி விழுந்து உயிருக்கு போராடுவதை, அவர்களுக்கு உதவி செய்யும் தன்னார்வலர்கள் விசாரித்து அருகிலுள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் கொடுத்து வருகின்றனர்.

இருப்பினும் கடந்த சில நாட்களில் குடித்துவிட்டு வெயிலில் சென்று திரும்பிய 10க்கும் மேற்பட்டோர் வீட்டில் நாக்கு வறண்டும், மயங்கி விழுந்தும் இறந்துள்ளனர். குடிபோதையில் அவர்கள் இறந்ததாக காவல்துறையில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ள நிலையிலும், இவர்களது இறப்புக்கு வெயிலின் தாக்கமும் ஒரு காரணியாக அமைந்திருப்பதை தவிர்க்க முடியாது என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக 35 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட நபர்கள் கடந்த ஓராண்டில் அதிகளவில் குடிபோதையில் இறப்புக்குள்ளாகி உள்ள நிலையில் அவர்களது குடும்பங்கள் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. கணவரை இழந்து சிறு வயதிலே விதவையான பெண்கள், வேலைக்கு சென்று குழந்தைகளை காப்பாற்றும் அவலம் புதுச்சேரியிலும் அதிகரித்து வருகிறது.

கள், சாராயக்கடைகள், பார்கள் மற்றும் ரெஸ்ட்டாரண்டுகளை திறக்கும் அரசு, இதுபோன்ற கோடை காலத்தில் நடுரோட்டில் போதையில் மட்டையாகி கிடக்கும் நபர்களை, குறிப்பாக யாருமில்லாத அனாதைகளை இறப்பில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

The post கொளுத்தும் வெயிலில் ரோட்டில் மட்டையாகி கிடக்கும் ‘குடி’மகன்கள் appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Tamil Nadu ,
× RELATED புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை